பக்கம் எண் :

88
 

செல்லும் இடங்கள் பலப்பல. சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் தம் உரை முழுதும் விரவி மணக்க எழுதியுள்ளார். சமய இலக்கண, மொழி இலக்கண விஷயங்களில் இவ்வுரையாசிரியர் எல்லை தேர்ந்தவர் என்பதனை இவ்விடங்களில் அறிகின்றோம். இவர் தம் உரையில் இன்னின்ன இடங்களில்தான் சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் சிறந்து உள்ளன என்று காட்டுதல் மிகை.

தொட்ட இடமெல்லாம் சாத்திர மணம் வீசுகிறது இத்திருமுறை உரையில். சாத்திரமும் தோத்திரமும் இணைப்புள்ளவையென்ற தத்துவத்துக்கு இலக்கியம் இத்திருமுறைக் குறிப்புரையே என்றும் கூறிவிடலாம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர் வாயிலாகத் திருப்பனந்தாள் காசிமடம் வழங்கிவரும் சாத்திரப் பரிசாகிய ஆயிரம் வெண்பொற்காசுகளையும் பெற்றுச் சிறக்கும் பெருந்தகையாரன்றோ இப்புலவர் திலகர்! அதனுடன் ‘மெய்கண்ட சாத்திரம்’ முழுமையும் ஆராய்ந்து பல ஏட்டுச் சுவடிகளையும் ஒப்புநோக்கி நிறுவி ஆதீனச் சார்பில் அதனை வெளியிடும் விழுப்பமும், ‘தோத்திரங்களும் சாத்திரங்களும்’ எழுதி அச்சிடும் அருமையும் வாய்ந்த நூலாசிரியராதலின் இவர் எழுதும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் சாத்திரக் கருத்துக்கள் தாமாக வந்து பாய்கின்றன. ஒவ்வொரு கருத்தும் இனிமையும் அருமையும் வாய்க்க வந்து வந்து தோய்கின்றன. இஃது ஒரு தனியழகு.

திருநாவுக்கரசு சுவாமிகளின் அநுபவ இன்பம் தோய்ந்த இவ்வரிய திருமுறைக்கு இத்தகையரோர் முதுபெரும் புலவரே இத்துணைத் தனியழகோடு உரையெழுதமுடியும் மெய்ம்மையைத் தமிழகம் இவ்வுரைநூலால் உணரலாகும். திருமுறைக்கு உரைகாண்டல் என்பதே தெளிவுள்ள சிந்தையாலேயே முடியும்.

அதிலும் அப்பர் சுவாமிகள் வாய்மொழியில் ஒவ்வோர் சொல்லும் ஆழமுடையசொல். எழுத்தும் ஆழமிக்க எழுத்து. அசையும் தெய்வீகத்தன்மை சார்ந்த அசை. இவ்வுரைநூலை முற்றப் பயின்றால்தான், இதனை உரையாசிரியர் எழுதுதற்கு எவ்வளவு பெருமுயற்சிஎடுத்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது புலனாகும். பலப்பல பாடல்களுக்கு வினை முடிவு காண்டலே அருமை. பொருள் உணர்தல் அதனினும் அருமை. படிக்கும்போது தோன்றும் பொருள் எழுதும்போது நலமே வெளிவரல் அதனினும் அருமை.