பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை3

நட்சத்திரங்கள் காலத்தில் உதிப்பது கடவுளின் கடமை தவறாமையைக் காட்டுகிறது.
குறுந்தொகை யாப்பமைப்பு:
     அப்பர் அருளிய ஐந்தாம் திருமுறைப் பதிகங்கள் நூறு. இந்நூறும் திருக்குறுந்தொகை எனப் போற்றப் பெறுவது. குறுந்தொகை என்பது யாப்பமைப்பால் பெற்ற பெயர். குறைந்த எழுத்துக்களைப் பெற்று அமைதலின் இப்பெயர் பெற்றது. இது நாற்சீர் நாலடியாய் வருவது.
     சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை எனப்பெயர் பெற்று விளங்குகிறது. இந்நூலில் நாலடிக்கு மேலும் பாக்கள் இருப்பினும் மற்ற சங்க நூல்களை நோக்கக் குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களை இந்நூல் உடையதாகலின் அப்பெயர் பெற்றது. குறுந்தொகைப்பாடல்களின் முதற்சீர் தேமா, அல்லது புளிமா என்று அமையும். தேமா என்று தொடங்கும் அடி ஒற்று நீக்கிப் பதினொரு எழுத்துக்கள் கொண்டிருக்கும். புளிமா என்று தொடங்கும் அடி ஒற்று நீக்கிப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்டிருக்கும். எனவே குறுகிய எண்ணிக்கையுள்ள எழுத்துக்களைக் கொண்டுள்ள அடிகளையும், குறைந்த அடிகளைக்கொண்ட பாடல்களையும் கொண்ட நூல் குறுந்தொகை என்று அழைக்கப்பெற்று வருகிறது.
     திருநாவுக்கரசர் இவ்வியாப்பமைப்பை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று சிந்திக்கும் பொழுது, ஒரு தலத்திலிருந்து பிறிதொரு தலத்திற்கு நடந்து செல்லும்பொழுதும், உழவாரத் திருத்தொண்டு செய்யும் பொழுதும் இவ்வியாப்பமைப்பு எளிமையாகப் பாட ஏற்றது எனக்கருதி அமைத்துக் கொண்டார் எனத் தோன்றுகிறது.
தில்லை பற்றிய முதல் பதிகம்:
     ஐந்தாம் திருமுறையில் முதல் திருப்பதிகமாகத் திகழ்வது "அன்னம் பாலிக்கும் தில்லை" எனத் தொடங்குவதாகும். இப்பாடலில், 'அன்னம்' என்று குறிப்பது சோற்றையும் வீடுபேற்றையும் குறிப்பதாகும். "பாதகமே சோறு பற்றியவா தோள் நோக்கம்" என்று திருவாசகம் வீட்டைச் சோறு எனக் குறிப்பிட்டிருத்தல் இக்கருத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது.
     தரிசித்தால் முத்திதரும் தலம் தில்லை என்பதும் ஈண்டு கருதத்தக்கதாம். வீடுபேற்றைத் தரவல்ல நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள தலம் தில்லைச் சிற்றம்பலம் என்பதை முதற்கண் கூறி, அடுத்துப் படிப்படியாகக் கீழிறங்கி வருகின்றார். அது பொன்னுலகமாகிய தேவலோகத்தையும் அளிக்கும்; மேலும்