இப்பூவுலகில் என்னுடைய அன்பு விரிந்து பரவுதற்குரிய ஈர்ப்பு நிலை கொண்ட இச்சந்நிதானத்தில் வழிபடுவதற்கு ஏதுவாக இப்பிறவியை அளிக்குமோ? இல்லை வீடுபேற்றைத் தந்தருளுமோ? என்று வினா வடிவில் கேட்டுள்ளார். அம்மை, மறுமை, இம்மை என்ற மும்மைப் பேறும் அளிக்கவல்லது தில்லை என்பதையே இப்பாடல் குறிக்கின்றது, என்று கொள்ளலாம். |
நினைப்பவர் மனமே கோயில்: |
தில்லைப் பெருமானைத் தொழுது உழவாரத்தொண்டு செய்திருந்த திருநாவுக்கரசர் திருவேட்களத்து ஈசரையும், திருக்கழிப்பாலை மணவாள நம்பியையும் வணங்கிப் போற்றிப் பாமாலை சூட்டித் தில்லை மீள்கிறார். மீளும் வழியில் வழிநடைப் பயணத்தில் "பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்" என்னும் பதிகம் பாடினார். இப்பாடலில் நினைப்பவர் மனத்தையே இறைவன் தாம் உறையும் கோயிலாகக் கொண்டுள்ளான் என்ற தத்துவத்தை விளக்கியுள்ளார். "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்" என்ற திருமூலர் வாக்கும் நினைக்கத் தக்கதாகும். இறைவனது மாட்சிமைப்பட்ட திருவடிகளை அன்பால் இடையறாது நினைப்பவரது உள்ளத்தாமரையில் இறைவன் விரைந்து சேர்பவன் என்று திருவள்ளுவர் கூறுகிறார். |
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் | |
-குறள் 3 |
என்பதே அக்குறள். இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" ஏகினான் என இறந்த காலத்தாற் கூறினார் என்கிறார். இதனையே, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்கிறார் அப்பர். அப்பாடல் காண்க. |
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந்து உய்வனோ | |
-தி. 5ப. 2பா.1 |
இமைப்பொழுதும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கும் பரமனை (தி. 5ப. 2.பா.1-10) நாம் இமைப்பொழுதும் அவனை விட்டு நீங்காது நினைதல் வேண்டும் என்பதையே இத்திருப்பதிகம் நமக்கு நினைவூட்டுகிறது. நீதியை, ஆதியை, ஐயனை, அமுதை, அத்தனை, பித்தனை, கூத்தனை என்றும் மறவாது நினைந்து போற்றுவோம். என்றும் மகிழ்வோடு வாழ்வோம். |