5. பொ-ரை: மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும், காலகாலனும், அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக. கு-ரை: மூவர்க்கும் மூலமாகிய மூர்த்தியை என மாறுக. காலனாகிய காலன் - காலத்தை வரையறுப்பவனாகிய இயமன். சூலபாணி - சூலத்தைக் கையின்கண் ஏந்தியவன். சிவபிரானே தத்துவங்கடந்த முதற்பொருளும் சமயத்தாரால் தொழப்படும் தெய்வமும் என்றபடி. 6. பொ-ரை: காற்று வடிவாயவனும், கடல் விடம் உண்டவனும், வெண்ணீறணிந்தவனும், நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும், சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை, அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக. கு-ரை: காற்றனை - காற்று வடிவானவனை. நிமிர் - நிமிர்ந்த. புன் - மெல்லிய. ஆற்றனை - ஆறு சூடியவனை. ஆல்தனை அமரும் ஏற்றனை எனினும் பொருந்தும். ஏற்றனார். (இடபம்) ஏற்றுர்தியை உடையவர். ஏத்தும் - தோத்திரியுங்கள். முதல்வனை அவன் தன் திருவடியை நினைத்தே தொழுது ஏத்துமின் என்றது அதுவே நினைக்க வருவது ஆதலின். 'நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை' (பரிபாடல் பா.4.அடி.62.) |