கு-ரை: விண்ணுளார் - தேவர். விளக்கினை - ஒளி வடிவானவனை. மருந்தினை - மருந்துபோல்வானை. பண்ணுளார் - இசைவாணர். விச்சுவசேவியனும் துன்பம் கடிவோனுமாகிய சிவபிரானையே தொழுதுய்க என்கிறார். 3. பொ-ரை: நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும். அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக. கு-ரை: நாளும் - நாடோறும். நம்முடைய நாள்கள் - நமக்கு இவ்வுலகில் உளதாய நாள்கள். ஆளும் - உடலை ஆட்சி செய்யும். ஐம்பதோடாறெட்டு - தொண்ணூற்றெட்டு. ஏழைமைப்பட்டு - அறியாமையுடையராகி. நையாதே - வருந்தாதே; மக்கள் - சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினோர். அரன் பாதமே அவரால் பற்றத்தக்கது என்றபடி. 4. பொ-ரை: விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும், தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும், அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக. கு-ரை: ஓசை - இன்னதென அறியாத ஆரவாரம். ஒலி - இசை முதலிய ஒலி நிகழ்ச்சிகள். பழகினார் - தம்மொடு அன்பு செலுத்திப் பழகினார். அழல்கையான் அமரும் கோளிலி என்க. குழகன் - என்றும் இளையன். |