பக்கம் எண் :

590திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

57. திருக்கோளிலி

பதிக வரலாறு:
     திருநாவுக்கரசர் திருவாஞ்சியம் முதலிய பல பதிகளையும் வணங்கித் திருமறைக்காடு செல்லும்பொழுது திருக்கோளிலியப்பரைப் போற்றிப் பாடியருளியது இத் திருப்பதிகம்.

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:170

பதிக எண்:57

திருச்சிற்றம்பலம்

1642.
முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.

1

1643.
விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.

2


     1. பொ-ரை: செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! (தியாகராசனே!) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன்; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை; ஆயினும் அடியேனை மறவாதே; என்னை நினைந்தருள்வாயாக! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி.
     கு-ரை: முன்னமே - காலம் வறிதே கழியாத முன்பே; உனை நினையாதொழிந்தேன் என்க. இன்னம் - இன்னமும். உன - உன்னுடையவான (அ-ஆறன் உருபு). மறவல் - மறவாதே.
     2. பொ-ரை: விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும், மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தரிளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக!