பக்கம் எண் :

818திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

2065.
வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

10

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: தேசு - ஒளி. பூசனைபுணரில் - வழிபாடு கூடினால் புணர்வாயதோர் - நம்மோடு கலந்து நிற்பதொரு. நேசன் - அன்பன்.
     10. பொ-ரை: ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்தபோது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
     கு-ரை: ஐம்புலனும் வெறுத்தான் என்க. கறுத்தானை - சினந்தவனாகிய இராவணனை. ஒறுத்தானை - தண்டித்தவனை.
 

 
        திருநாவுக்கரசர் புராணம்

பேராத பாசப் பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத வன்புபெற வாதரித்த வம்மடவார்
நீரார் கெடிலவட நீள்கரையி னீடுபெருஞ்
சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்தார்.

சென்றுதிரு வீரட்டா னத்திருந்த செம்பவளக்
குன்றை யடிபணிந்து கோதில் சிவச்சின்னம்
அன்று முதற்றாங்கி யார்வமுறத் தங்கையால்
துன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.

-தி.12.சேக்கிழார்.