பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)99.பொது819

99. பொது

பதிக வரலாறு:
     பாவமும் பழியும் நீங்கும் வழியை முதல் திருப்பாடல் சொல்வதால் இப்பெயர் எய்திற்று.

பாவநாசத் திருக்குறுந்தொகை

ப.தொ.எண்: 212

பதிக எண்: 99

திருச்சிற்றம்பலம்

2066,
பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.

1

2067.
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீச னெனாதவர்க் கில்லையே.

2


     1. பொ-ரை: பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான்.
     கு-ரை: பாவமும் பழி பற்று - பாவமும் பழி பற்றியிருத்தலும். அற - நீங்க. வேண்டுவீர் - விரும்புகின்றவர்களே. ஆவில் அஞ்சு - பசுவிடம் உண்டாவனவாய பஞ்சகவ்வியம். உகந்து - மகிழ்ந்து. ஆடும் -அபிடேகம் கொள்ளும். கழல் - திருவடிகளை. மேவராய் - விரும்புபவராய். உள்குமின் - நினையுங்கள். காவலாளன் - காத்தல் செய்பவனாய அப்பரமன். கலந்து - நம்மோடு உடனாய் நின்று.
     2.பொ-ரை: கங்கை நீராடிலும், காவிரியில் நீராடிலும், மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும்,பெருகி ஓலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன்? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.