| 2777. | விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை | | | வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச் | | | சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத் | | | தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை | | | அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க | | | அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப் | | | படையானைப் பள்ளியின்முக் கூட லானைப் | | | பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 2 |
(சமண சமயத்தை)க் குறித்தது; எப்பொருட்கும் முதல்வனாகிய இறைவனை உளன் என்று ஒருதலையாகத் துணியாது, 'உளனோ, இலனோ' என ஐயுற்று நிற்றலின் சமண் சமயம் பாழ் நெறி(பயனில்லாத நெறி) ஆயிற்று. 'அஃது ஐயத்தை உடைய நெறியே' என்பதனை, 'அத்தி நாத்தி' (உண்டு இல்லை) என்னும் அதன் தத்துவக் கொள்கையே இனிது விளக்கும். அதுபற்றியே, "ஐயுறும் அமணரும்" (தி.1. ப.128. அடி. 36.) என்று அருளிச் செய்தார், ஆளுடைய பிள்ளையார். ஐயத்தையுடையார் வீடுபேறு எய்தாமை, "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் - வானம் நணிய துடைத்து" (குறள்.353.) என்னும் பொதுமறையான் இனிது விளங்கிக் கிடந்தது; ஆகவே, சமண் சமயத்தை சுவாமிகள். 'பாழ்நெறி' என்று கூறி அதன் உண்மையுணர்த்தி யருளினார் என்க. 'பாழின்கண்ணே' என உருபு விரிக்க. ஏகாரம் பயனுடைய நன்னெறியினின்று பிரித்தலின், பிரிநிலை."பாழே" என்பதற்கு (இவ்வாறன்றி, 'பாழாகவேபயனின்மை உண்டாகும்படியே)' என ஆக்கம் வருவித்து உரைப்பினும் ஆம். 'உழன்றவாறு இரங்கத்தக்கது' எனச்சொல்லெச்சம் வருவித்து முடிக்க. 2. பொ-ரை: காளை வாகனனாய், தேவர்களால் தியானிக்கப்படுபவனாய், வேதம் ஓதுபவனாய், வெண்பிறைசூடிய சடையனாய், நீலகண்டனாய், மெய்ப் பொருளாய், ஒப்பற்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய், கூரியசூலப் படையை உடையவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது. கு-ரை: எண்ணத்தான் - தியானத்தின் உள்ளவன். சாமம் - கருமை. போல், அசைநிலை. அயில் -கூர்மை.
|