பக்கம் எண் :

1202
 

கு-ரை: வானவன் - தேவன்; என்றது, 'தேவருள் ஒருவன் போல நின்று, வேண்டுவார் வேண்டுவனவற்றை அருளுபவன்' என்றவாறு; சிவபிரான் தேவருள் ஒருவனாய் நின்று, அவர்கட்கும் மக்கள் முதலிய பிற உயிர்கட்கும் அருளுதல் பற்றி அவனைத் தேவருள் ஒருவனாகவே உணர்தல் மயக்க உணர்வேயாம் என்பதனை,

"தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாத
ராவது முணரார் ஆதி அரியயற் கறிய வொண்ணா
மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார்"

என விளக்கும் சிவஞான சித்தி (சூ 1, 49.) - இதனை அறிவுறுத்தற் பொருட்டே, பின்னர், "வானவர்க்கு மேலானான் காண்" என்றருளிச் செய்தார் என்க. "வடமொழியும் தென்றமிழும் ........ ஆனவன்" என்றதன் கருத்தை, "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (ப.23. பா.5.) என்றதன் குறிப்பிற் காண்க. "எல்லாப் பொருளும் வேதத்தின்கண் உள்ளன" என்றலின், "மறைகள் நான்கும் ஆனவன் காண்" என்றதனால், 'ஏனை எல்லா நூல்களும் ஆனவன்' என்பது தானே பெறப்பட்டது.

ஐயன் - தலைவன். கானவன் - காட்டில் இருப்பவன். கானவனுக்கு - வேடனுக்கு; கண்ணப்ப நாயனாருக்கு; அவருக்கு அருள் செய்தமையை எடுத்தோதியது, இறைவற்கு அன்பு ஒன்றே உவப்பாவது; அதனால் 'அவ்வன்பின் வழிப்பட்ட வழி இழிந்தனவும் உயர்ந்தனவாய், உவகையைப் பயப்பிக்கும்' எனவும், 'அதன் வழிப்படாதவழி உயர்ந்தனவும் இழிந்தனவாய், வெறுப்பைத் தோற்றுவிக்கும்' எனவும் உணர்த்துதற் பொருட்டு 'இதயத்து' என்புழி அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை; எனவே, 'இதய கமலம்' என்பது பொருளாயிற்று. இனி, 'இதயத்திடத்து, கமலத்துக்கண் ஊறும்தேன் போன்றவன்' என, "கமலத்து ஊறும்" என்றதனை இடைநிலையாக்கி உரைத்தலுமாம். ஊறும் - சுரக்கின்ற. 'ஊறும் தேன் போன்றவன்' என்றது, உள்நின்று விளங்கி, இன்பம் தருதல் பற்றி.

சென்று அடையாத செல்வம் - முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்று அடைதல் என்பது இன்றி, இயல்பாகவே உள்ள செல்வம்; அஃது அவனது வரம்பிலின்பம். "சென்று அடையாத" என்றதனால், நீங்காது என்றும் உளதாதலும் பெறப்பட்டது. "சென்றடையாத திருவுடையானை" (தி.1. ப.98. பா.1.) என்று அருளினார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும். இப்பொருட்கு, "அடையா" என்னும் எச்சம் "செல்வன்". என்றதன்