பக்கம் எண் :

1203
 
2947.நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த

நாதன்காண் பூதகண மாட ஆடும்

சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்

துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்

பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்

புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற

திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்

சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

2


முதனிலையோடு முடியும்; இனி 'பெயர்ந்து சென்று அடையாது, உணர்வு வேறு பாட்டானே அடையப்படும் இன்பப் பொருளாய் உள்ளவன்' என்று உரைத்தலுமாம். "சிவன்" என்பதன் பொருளை (ப.31. பா.6 உரை) காண்க. "சிவனவன்". என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. எம் செல்வன் எமக்குச் செல்வமாய் (எல்லா நன்மைகளுமாய்) உள்ளவன்.

2. பொ-ரை: சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான் உடை இல்லாதவனும், ஒளியுடைய பாம்பினை இடையிற்கட்டிய தலைவனும், பூதகணங்கள் ஆட அவற்றுடன் தானும் ஆடும் அழகனும், கொக்கிறகைச் சூடினவனும், துணை முலைகளை உடைய துடிபோலும் இடையாளுக்குச் சேரப்படும் இடமாந் தகுதிபெற்ற பொலிவையுடையவனும், சம்புடத்துக்கொண்ட வெள்ளிய திருநீற்றை உடையவனும், புவனங்கள் மூன்றிற்கும் உயிராய் நின்ற புகலிடமானவனும், செவ்வானம் போலத்திகழும் மேனியையுடையவனும் ஆவான்.

கு-ரை: நக்கன் - உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தைக் குறித்தது. 'நக்க அரவம்' என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. நக்க - ஒளியை உடைய; 'ஒளி, மாணிக்கத்தது' என்க.

சொக்கன் - அழகன். சேர்வு - சேரப்படும் இடம். பொக்கன் - பொலிவை உடையவன். பொக்கணம் - சம்புடம். "சுத்திய பொக்கணத்து" என்னும் தி.8 திருக்கோவை. (பா. 242.) யும் காண்க. பொருள் - முதற்பொருள்; 'உயிர்' என்றவாறு, திக்கு - புகலிடம். செக்கர் - செவ்வானம்; 'செக்கர் போலத் திகழும்' என்க. இனி, செக்கர் - சிவப்பு நிறமுமாம். அது, பகுதிப்பொருள் விகுதி.