பக்கம் எண் :

1237
 
2982.மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று

மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்

சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்

தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட

அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை

அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்

கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

10

திருச்சிற்றம்பலம்


"கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து"

எனவும் (தி.11 அற்புதத் திருவந்தாதி - 72) எழுந்த திருமொழிகள் இங்கு ஒருதலையாக உணரற்பாலன. "விதி" என்றது, வேதவிதியை எனவும், இங்கு, "வெண்ணீறு என்றது சிவாகமவிதியை" எனவும் கொள்க. "வெண்ணீறு" என்றது, உபலக்கணத்தால் ஏனைய சிவநெறிச் சாதனங்களையும் கொள்ள நின்றது என்க. விளங்கொளி - இயல்பாகவே விளங்குகின்ற ஒளி, மெய் - மெய்ப்பொருள்; தோற்ற ஒடுக்கங்கள் இல்லாத பொருள்; இவையிரண்டும் ஆயினமையால் மிக்கோர்கள் போற்றுவராயினர் என்க. "கருத்து" என்றது, கொள்கையை; எனவே, மிக்கோர்களால் போற்றிக் கொள்ளப்படும் பொருள் என்றதாயிற்று.

10. பொ-ரை: இதழுடைய வட்டமான தாமரை மலரில் ஆயிரத்தில் ஒன்றாகத் தன் தாமரை மலர்போலும் கண்ணைப் பெயர்த்து இடுதலும் நிறைந்த பெரிய அழகினையும் ஒளியையும் உடைய சக்கராயுதத்தை நெடு மாலுக்கு அருள் செய்தவனும், யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், தன் நண்பன் குபேரன் தோற்றுக் கைவிட்ட வலிய சக்கரத்தையுடைய தேரினைத் தன் உடைமை ஆக்கிக்கொண்ட இலங்கைக்கோனை எடுத்தற்கரிய கயிலை மலைக்கீழ் வைத்து நெரித்தவனும், பின் அவனுக்கு அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலானவனும், கஞ்சனூர் ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக்கண்டு, மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.