கோயிலிலுள்ள ஐந்து சபைகள்: பேரம்பலம் - இது இக்கோயிலிலுள்ள ஐந்து சபைகளுள் ஒன்று. இதனைத் தேவசபை என்பர். தேவாரம் முதல் திருமுறையில், "நிறைவெண் கொடிமாடம் நெற்றிநேர் தீண்டப் பிறைவந் திறைதாக்கும் பேரம்பலம்" என்று சம்பந்த சுவாமிகளாற் (தி.1 ப.80 பா.4) கூறப்படுகிறது. சிற்றம்பலம்: நடராசப்பெருமான் நடம் புரிந்தருளும் இடம். இது "தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்" (தி.5 ப.2 பா.8) என்றும் "தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்' என்றும் அப்பர் சுவாமிகளால் விளக்கப்படுகிறது. கனகசபை: பெருமான் அபிடேகங்கொண்டருளுமிடம். சிற்றம்பலத்திற்கு முன்னுள்ளது. நிருத்தசபை: பெருமான் ஊர்த்துவ தாண்டவம் புரிந்தருளுவது. கொடி மரத்தின் தென்பாலுள்ளது. இராஜசபை: இது ஆயிரங்கால் மண்டபம் ஆகும். கல்வெட்டு: இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற் குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாம் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி
|