வீரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விஜய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிண தேவமகாராயர், வீரப்பிரதாப வேங்கடதேவமகாராயர், ஸ்ரீரெங்க தேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும்: கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்; சாளுவ பரம்பரையில் வீரப் பிரதாபதம்முராயர் I காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளையன்றி இக்கோயிலைப் பற்றி வேற்றூர்களில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இருக்கின்றன. இவைகளை எல்லாம் தழுவிய வரலாறே ஈண்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது. இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் இராஜேந்திர சிங்கவளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என்றும், முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் இராஜாதிராஜவளநாட்டுத் தனியூர்ப் பெரும்பற்றப்புலியூர் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. மூர்த்திகளின் பெயர்கள்: இப் பெரும்பற்றப்புலியூரில் மூலத்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமூலத்தானமுடையார் என்றும், பேரம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் ஆளுடையார் என்றும், சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருச்சிற்றம்பலமுடையார், தில்லை நாயகத் தம்பிரானார், ஆநந்தத்தாண்டவப்பெருமாள், பொன்னம்பலக்கூத்தர், சிதம்பரேசுவரர் என்றும், அம்மன் சிவகாமசுந்தரியார் என்றும், அம்மனுக்குரிய திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாய்ச்சியார் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர். திருமாளிகைகள்: திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்த முதல் திருமாளிகைக்குக் 'குலோத்துங்கசோழன் திருமாளிகை" என்றும், இரண்டாம் பிராகாரத்தைச் சூழ்ந்துள்ள திருமாளிகைக்கு விக்கிரமசோழன் திருமாளிகை என்றும், மூன்றாம் பிராகாரத்தைச் சூழ்ந்துள்ள திருமாளிகைக்கு இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன.
|