விக்கிரமசோழன் திருமாளிகை என்பது முதற்குலோத்துங்க சோழனது மகனாகிய விக்கிரமசோழன் பெயரால் கட்டப்பெற்றதாகும். இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை மூன்றாங்குலோத்துங்கசோழன் திருப்பெயரால் அமைக்கப்பெற்றதாகும். இராசாக்கள் தம்பிரான் என்பது மூன்றாங் குலோத்துங்க சோழனுக்கு வழங்கிவந்த சிறப்புப் பெயர்களில் ஒன்று1. திருவிழாக்கள்: இத்திருக்கோயிலில் ஆனித்திருநாள், மார்கழித் திருநாள், மாசித்திருநாள் இவைகள் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வந்தன. மாசித்திருநாளில் திருத்தொண்டத்தொகை விண்ணப்பஞ் செய்யப் பெற்றுவந்தது. இவைகளின் பொருட்டு முதலாம் இராஜேந்திர சோழ தேவரின் (கி.பி. 1012 - 1044) அணுக்கிநக்கன் பரவை (பாவை என்றும் படிக்கலாம்) என்னும் அம்மையார் நாற்பத்து நான்குவேலி நிலங்களை இராஜேந்திரசோழதேவர் வழங்கி அருளின பொன்னைக் கொண்டு வாங்கி அளித்திருந்தனர். மாசித் திருநாளில் இறைவர் கடலாடி வீற்றிருக்க, சிதம்பரந்தாலூகாவைச் சேர்ந்த கிள்ளை என்னும் கிராமத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவனாகிய கூத்தனால் மண்டபம் ஒன்று கட்டப்பெற்றுள்ளது. மாசிக்கடலாட இறைவர் எழுந்தருளுவதற்கு ஒரு பெருவழியையும் அக்கூத்தன் அமைத்தான். அதற்கு விக்கிரம சோழன் தெற்குத்திருவீதி என்று பெயர் வைக்கப்பெற்றிருந்தது. தைப்பூசத் திருநாளும் இத்திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. அப்பூசத் திருநாளில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கயிலாயதேவன் என்பவன் தன் பெயரால் கயிலாயதேவன் திருப்பாவாடைப்புறம் ஒன்றை ஏற்படுத்தி அன்று அமுதுபடிக்குப் பத்துகலம்
1. இத்திருமாளிகை முதற் குலோத்துங்கசோழன் காலத்தில், மிழலைநாட்டு வேள் கண்டனமாதவனால் கட்டப்பெற்றதாகும். இச் செய்தியைத் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறைக் கோட்டத்தில், பாடல்பெற்ற நீடூர் திருக்கோயிலில் பொறிக்கப்பெற்ற "தில்லையம்பலத்து வடக்கின் பால் புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும், வரிசையால் விளங்கப் பொற்பினால் விருப்புறச் செய்தான்" என்னும் கல்வெட்டுப்பகுதி அறிவிக்கின்றது. (Epigrahia Indica Volume XVIII Page 6.)
|