பக்கம் எண் :

57
 

விளங்குபெருந் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே

உளங்கொள்திரு விருத்தங்கள் ஓங்குதிருக் குறுந்தொகைகள்

களங்கொள்திரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது

வளங்கொள்திருப் பதியதனில் பலநாள்கள் வைகினார்

(தி.12 திருநா. புரா. 337)

எனவரும் சேக்கிழார் திருப்பாடலால் (1) விருத்தம் (2) குறுந்தொகை (3)திருநேரிசை (4) தாண்டகம் ஆகிய யாப்பு வகைகளை அடிகள் மேற்கொண்டார் என்பது விளங்கும்.

திருநேரிசை நேரிசைக் கொல்லி எனவும், திருவிருத்தம் விருத்தக் கொல்லி எனவும் கொல்லிப்பண்ணில் அடக்கப்பெறும், திருநேரிசை "கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா" எனவரும் கட்டளையடி உடைய செய்யுள் என்றும், அறுசீர்களால் இயன்ற இக்கட்டளையடியில் முதற்சீரும் நான்காம்சீரும் ஓரோவழிக் கருவிளம் ஆதலும், இரண்டாம்சீரும் ஐந்தாம்சீரும் ஒரோவழி தேமாவாதலும் உண்டு எனறும், மூன்றாம் சீரும் ஆறாம்சீரும் எப்பொழுதும் தேமாவாக நிற்பன என்றும் இந்த யாப்பமைதியை யாழ்நூல்(பக். 217) ஆசிரியர் விளக்குவர்.

திருவிருத்தம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பமைதி உடையது. 'அடியடிதோறும் ஐஞ்சீராகி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது, கடையொரு சீரும் விளங்காயாகி, நேர் பதினாறு நிரை பதினேழு என்று, ஓதினர் கலித்துறை ஓரடிக்கு எழுத்தே' என்னும் இலக்கணப்படி அமைந்தபகுதி திருவிருத்தம்.

திருக்குறுந்தொகை, நாற்சீர் நாலடியாய் அடிதோறும் தேமா புளிமா என்பவற்றுள் ஒன்று முதல் சீராகவும், கருவிளம் கூவிளம் என்பவற்றுள் ஒன்று நான்காம் சீராகவும், இடையிரு சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும், சிறுபான்மை மாச்சீர்களாகவும், அமையவரும் செய்யுள்வகை. சிலப்பதிகார வேட்டுவவரியில் இவ்வமைப்பை உடைய பாடல்கள் உள்ளன. ஆதலால் கி. பி. 2ஆம் நூற்றாண்டிலேயே இந்தயாப்பும் பெருகியிருந்த தென்பர். 1பிற்கால யாப்பிலக்கணப்படிக் கலிவிருத்தம் என்பர்.


1 பன்னிருதிருமுறை வரலாறு: திரு. க. வெள்ளைவாரணனார் - பக். 326.