தாண்டக விளக்கம்: இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார்; ஆறாம்திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித்தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும். பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையிலிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந்தாண்டகம் என்ற இரண்டாம். ஒவ்வோரடியினும், 'அறுசீரேனும்' 'எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யுளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிருபாட்டியற் கருத்தாகும். இவற்றுள் அறுசீரடிப்பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண்சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம். "மூவிரண் டேனும் இருநான் கேனும் | சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் | கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள் | அறுசீர் குறியது நெடியதெண் சீராம்" |
என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110) "அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங் | கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி | குறியது நெடிய திருநாற் சீரே" |
என்பது பல்காயனார் வாக்கு. "மங்கல மரபின் மானிடர் கடவுளர் | தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே" |
"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே" |
|