என்பன மாபூதனார் நூற்பாக்கள், "அடிவரை நான்கும் எழுத்தெண்ணி | நேரடி வருவது தாண்டகம் ஆகும்" |
என்பர் சீத்தலையார்; இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும். குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும். அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றிய லுகரமும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவினைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும். ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்தயாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத் தக்கது. "எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப்பாவும், வடமொழித்தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும்." 1 தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்தவகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள்ளார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குமுன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று. பின்வந்த திருமங்கை யாழ்வாரும் இந்தயாப்பை மேற்கொண்டு காத்தனர்.
1 பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார். பக். 330 காண்க.இப்பகுதியில் இவ்யாப்பு அமைதி விரிவை ஆசிரியர் அழகுற ஆராய்ந்து முடிவுபோக்கியிருத்தல் அறிந்தின்புறத்தக்கதாகும்.
|