பக்கம் எண் :

60
 

தாண்டவமாடும் சிவன்தாள் மலரின்பம் நுகர்ந்த அடிகள் அப்பெருமான் புகழ்பாட இதனை மேற்கொண்டது வியந்து போற்றுதற்குரியதாகும். இப்போது கிடைத்துள்ள அப்பர் திருத்தாண்டகங்களின் தொகை தொளாயிரத்து எண்பத்தொன்று (981) ஆகும் என்பது இங்கு அறியத்தக்கது.

அகப்பொருட் பதிகங்களின் அமைப்பு:

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக்கற்ற பண்பினர் அப்பரடிகள் ஆதலின், அப்பெரியார் அமுதவாக்குக்களில் இலக்கிய ஒட்பங்களும் இணைந்து நிற்கக் காணலாம். அவற்றை இங்கு அறிந்து இன்புறுவோமாக; அகப்பொருள் தமிழ்க்குச் சிறப்பு. மற்ற எம்மொழிக்கும் இல்லாப் பெருஞ் சிறப்பாக அகப்பொருள் இலக்கணம் தமிழ்க்கு வாய்த்துள்ளது.

அகத்தே நிகழும் தன்மையதாய்ப் புறத்தார்க்கு உணர்த்துதற்கரிதாய் இருப்பது அகத்திணை. அவ்வகவொழுக்கம் பற்றிய சங்கப் பாடல்கள் மிக்க நுட்பமும் சீர்மையும் வாய்ந்தவை.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை,அகநானூறு ஆகிய தொகைநூல்கள் முற்றும் இவ்வைந்திணை நெறியளாவிவரும் இயல்புடையவை. தமிழ்ப் பாவலர் திலகம் போல்வாரும், நடையறாப் பெருந்துறவியாரும் ஆகிய திருநாவுக்கரசர் பெருந்தகையும் இறைவன் திருவருளில் தோய்ந்து நின்று புனையும் கவிகளில் இவ்வமைப்பு உடையனவாகப் பலவற்றைப் புனைந்துள்ளார். அவை இலக்கியச் சிறப்புடையனவாய் இலங்குகின்றன.

இப்பெருந்தகையார் திருவாக்கில் வரும் அகத்துறைப் பகுதிகள் கீழ்வரும் முறைப்படி அமையும் பெற்றியன.