தாம் சைவசமயத்தை விட்டுச் சமண சமயம் புகுந்து இடர்ப்பட்டதை இப்பிறிதுமொழிதல் உவமையினால் அவர் விளக்குகின்றார். திலகவதியார் முதலியோருடைய அறிவுரைகளையெலாம் இகழ்ந்து பொருட்படுத்தாது, வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிந்து, சமண சமய உண்மைகளை ஆராய்ந்து கண்டுகொள் என்று சமண் சமயத்தார் கூற, சமண் சமயம் புகுந்து அதனை மேற்கொண்டு,மீளும் வகையின்றி இடர்ப்பட்டவர் அடிகள். இந்நிலையை விளக்கும் அடிகள், கூறாமற் கூறித் தம் துயரநிலையைப் புலப்படுத்துகின்றார். ஆழப்பொருளை அகத்தே உடைய அப்பாடற் பகுதி பின் வருவதாகும்: "காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் | கரைநின்றவர் கண்டுகொ ளென்று சொல்லி | நீத்தாய கயம்புக நூக்கியிட | நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்" | (தி.4. ப.1. பா.5) |
'கருதிய பொருளைத் தொகுத்து, அதனைக் கூறாது, ஒத்த பொருள் ஒன்றை, உரைப்பதை இவ்வணியாகக் கூறுவர்' திருவள்ளுவர். 'நுனிக்கொம்பர் ஏறினார்'. 'பீலிபெய் சாகாடும்' ஆகிய குறட் பாக்களில் கூறும் முறையை ஒட்டியவையாக இவ்வமைப்புக்களை நாம் காணலாம். எல்லாம் சிவம் எனல்: எல்லாம் சிவமயமாகக் காணும்பெருந்தகை அப்பரடிகள். எப்பொருளைக் கண்டாலும் அதனூடு இறைவனைக்கண்டு ஏத்துவது இப்பண்பட்ட அருட் புலவரின் இயல்பு; இதனைத் திருவையாற்றுப் பதிகத்தில், காந்தாரப் பண்ணில் அமைத்து அருளியுள்ளார். சோலைகளும், பிற பூங்காக்களும் நிறைந்த திருவையாற்றில், பிடியும் களிறும், கோழியும், பெடையும்,குயிலும் பெடையும், மயிலும் பெடையும், பகன்றில்களும், ஏனங்களும், நாரையும், மானும், கிளியும், நாகும், ஏறும் ஆகியவற்றைக் காண்கின்ற அடிகள் சிவமும் சத்தியுமாகவே இவற்றைக் கண்டு களிக்கின்றார்; கவிதை இசைக்கின்றார்; "கண்டேன் அவர்திருப்பாதம்கண்டறி யாதன கண்டேன்"
|