இருத்தல் வேண்டும் என்பர் பழந்தமிழ் நூலோர்; 'பாட்டோடு இயையாத பண்ணினால் என்ன பயன்? கண்ணோட்டமில்லாத கண்போன்றது அது' என்று உரைப்பர் ஆசிரியர் திருவள்ளுவரும். அப்பரடிகளுடைய அமுதப்பாக்கள் இனிய பண்ணமைப்பிற்கு இனியவையாய் உள்ளமையை அன்பர்கள் நன்கு அறிவர்.1 இவ்வாறு தக்க பண்களுடன் விளங்கும் பழுத்த அநுபவப் பாடல்களாகிய இவற்றிற் காணப்பெறும் இலக்கிய அழகுகளை இனி ஒவ்வொன்றாக இங்குக் காண்போம்; இவ்விலக்கிய அழகுகள், ஒன்பான் சுவையமைப்புடனும், கவிதைச் சீரியல்புகளுடனும் கலந்து திகழுமாற்றையும், பழந்தமிழ்ப் பாடல்களுடன் கருத்தொற்றுமை கொண்டு கவினுமாற்றையும் நுகர்ந்து மகிழ்வோம். உவமை நலம்: உவமை, இலக்கியக் கலையெழில்களில் முதலிடம் பெறுவதாகும். கவிதையில் உவமை கருத்து விளக்கம் செய்வதுடன், அழகும் தருகின்றது. உவமை யமைந்த கவிதை, அணிகலம் பூண்ட அரிவை யொருத்தியைப் போன்ற தென்பர். எல்லா அணிகளுக்கும் தாயாகும் பெருமையும், உவமைக்குண்டு. தொல்காப்பியரும் இவ்வுவமையணி யொன்றையே விரிவாக ஆராய்ந்து தம் நூலில் அமைத்துள்ளார். 'வேறுபடவந்த உவமத்தோற்றம்' என மற்றவற்றைத் தழுவி அவை உவமவிகற்பங்களே என விளக்கியுள்ளார். அருட்புலவர்கள் அருள் வாக்குக்களிலும் சீரிய உவமைகள் பலவற்றை நுகர்ந்து மகிழ்கின்றோம். அப்பரடிகள் தேவார அருளிச் செயல்களிலும் பலவகைப்பட்ட உவமைகளைக் காணலாகும். வினை, பயன்,மெய், உரு எனும் நான்கு வகைகளில் இவ்வுவமைகள் பெரும்பாலும் வினையுவமையாகவே விளங்குகின்றன எனலாம். நீர்நிலை பற்றியது: நீர்நிலையொன்றினைக் காவல் செய்து வருவோர்சிலர் உள்ளனர். அக்காவலைப் பொருட்படுத்தாமல், நீர் நிலைக்கரைக் கண் நின்றவர், அந்நீர்நிலையின் ஆழம் அறிய வினவ 'நீரே இறங்கிக் கண்டு கொள்வீராக' என்று காவலர் கூறிவிட, இறங்கு துறையிலேயே மூழ்கித்தவிக்கும் மக்களை நமக்குக் காட்டுகின்றார், அடிகள்.
1 அப்பரடிகள் அருளிய திருமுறைகளின் பண்களையும் அவற்றின் கட்டளை யாப்புவிகற்பங்களையும், பன்னிருதிருமுறை வரலாறு பக். 391 - 399 விரிவாகக் காணலாம். திருமுறைகண்ட புராணத்தில் வரும் கட்டளையடிக் குறிப்புக்கள் நன்கு பொருந்துமாறு இவ்வாசிரியர் ஆராய்ந்து விளக்கியுள்ளமை பெரிதும் பாராட்டத் தக்கதாகும்.
|