பக்கம் எண் :

898
 
2638.மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி

மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி

உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி

உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி

திருவாகி நின்ற திறமே போற்றி

தேசம் பரவப் படுவாய் போற்றி

கருவாகி யோடும் முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

3

செயற்படுதலை, நன்று மகிழ்ந்தாய் - மிகவும் மகிழ்ச்சியோடு காண்கின்றவனே; 'மகிழ்ச்சி' என்றது, அறியாமை நோக்கி நகைத்தலை. மருவி - அணுகி. பொய்ச்சார் (பொய்த்தார்) - நின்னிடத்துக் கொண்ட அன்பினை விட்டவர். சிந்தையில் மருவினமைக்கும், மருவி நீங்காது நின்றமைக்கும் வேறு வேறாக வணக்கங் கூறியருளினார் என்க.

3. பொ-ரை: பகைவர் மும்மதில்களையும் அழித்து, விரும்பி என் உள்ளத்துப் புகுந்து, என்னை உருவமுடையவனாகப் படைத்து, என் உயிர் உடம்பின்வழிப் படாதபடி நீக்கி நின் வழிப்படுத்து எனக்கு இன்பமாகிநின்ற செயலுடையவனாய், உலகத்தாரால் முன்னின்று துதிக்கப்படுபவனாய், கருவாய்க்கப்பெற்றுச் சஞ்சரிக்கும் காளமேகம் போல் உலகுக்கு நலன் தருவானாய், உள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

கு-ரை: மருவார் - பொருந்தாதார்; பகைவர். உருவாகி - உருவமுடையவனாய் நின்று; இனி, 'ஆக' என்பது, 'ஆகி' எனத் திரிந்து நின்றது எனலுமாம். உள் ஆவி - உடம்பினுள்ளே இருக்கும் உயிர்; உள்ளிருத்தல், நுண்ணிதாய் நிறைந்து நிற்றல். வாங்கி ஒளித்தாய் - பிரித்தெடுத்து மறைத்தாய்; என்றது, உயிரை உடம்பின் வழிப்பட்டுச் செல்லாது நீங்கி, நின்வழிப்படுத்தினாய் என்றபடி. திரு - இன்பம். தேசம் - உலகம். ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு (தி.5. ப.91. பா.3.) ஞாலத்தாரும் தொழுதலின், "தேசம், பரவப் படுவாய்" என்றருளிச் செய்தார். கருவாகி - கருவாய்க்கப் பெற்று; நீரை உண்டு.