பக்கம் எண் :

908
 

56. திருக்கயிலாயம்

பதிக வரலாறு:

இத்திருப்பதிக வரலாற்றை 268ஆம் திருப்பதிகத்திற் காண்க.

போற்றித் திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 269

பதிக எண்: 56

திருச்சிற்றம்பலம்

2647.பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி

பூதப் படையாள் புனிதா போற்றி

நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி

நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி

வானோர் வணங்கப் படுவாய் போற்றி

கறையுடைய கண்ட முடையாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

1


1. பொ-ரை: எதனையும் தாங்குதலை உடைய நிலமாகவும் நீராகவும் இருப்பவனே! பூதப்படையை ஆளும் தூயவனே! நல்வழியில் நிறுத்தப்படும் நெஞ்சில் இருப்பவனே! என் உள்ளத்தில் நீங்காது இருப்பவனே! மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே! தேவர்களால் வணங்கப்படுபவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: பொறை - பொறுத்தல்; தாங்குதல். நிறை - (நல்வழியில்) நிறுத்தப்படுதல்; "நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை" (கலி - 133 அடி - 12) எனலுமாம்.

இங்கு மறையாவது இறைவனது அருள் அநுபவம்; பிறராவார், அதனை உணர்ந்து போற்றமாட்டாதார். மறை - மறைத்துச் சொல்லப்படும் பொருள்கள்; மறைத்தல், உணரமாட்டாதார்க்கு என்க; இனி, 'மந்திரம்' என்றும் ஆம். கறை - நஞ்சு.