| 2646. | உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி | | | ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி | | | எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி | | | இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி | | | பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி | | | பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி | | | கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 11 |
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை: உண்ணாது உறங்காது இருப்பவனே! வேதங்களை ஓதாது உணர்ந்தவனே! உன்பெருமையை நினைத்துப் பார்க்காது செயற்பட்ட இராவணனைச் சிறிதளவு விரலை அழுத்தி நசுக்கி மகிழ்ந்து, அடக்கி ஆள்பவனே! பின் அவன்பால் பண்ணோடு கூடிய இசையின் இனிமையைச் செவிமடுத்தவனே! முன்னரேயே அடியேனுடைய உள்ளத்தில் புகுந்தவனே! உலகுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: 'உண்ணாது உறங்காது இருந்தாய்' என்பதற்கு, மேல், "இமையா துயிரா திருந்தாய்" (ப.55 பா.8) என்றதற்கு உரைத்தவாறு உரைக்க. "ஓதாது உணர்ந்தாய்" என்றது, 'இயற்கை உணர்வுடையவனே' என்றவாறு, எண்ணா - மதியாத. "இலங்கைக்கோன் தன்னை" என்பதன் பின்னுள்ள போற்றி என்பதனை, 'ஈசா' என்பதன் பின் வைத்துரைக்க. இறை வைத்த - சிறிது ஊன்றி. 'பின் உகந்தாய்' என்க. பண் ஆர் இசை இன் சொல் - பண்ணாய் நிறைந்த இசையொடு கூடிய இனிய சொல். 'உகந்தமைக்குக் காரணம் இது' என்பார், இதனை அருளிச் செய்தார். உலகிற்குக் கண்ணாய் நிற்றலாவது, அது நடத்தற்கு நிமித்தமாய் நிற்றல்.
|