பக்கம் எண் :

911
 
2648.முன்பாகி நின்ற முதலே போற்றி

மூவாத மேனிமுக் கண்ணா போற்றி

அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி

ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி

என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி

யென்சிந்தை நீங்கா இறைவா போற்றி

கண்பாவி நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

2

2649.மாலை யெழுந்த மதியே போற்றி

மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி

மேலை வினைகள் அறுப்பாய் போற்றி

மேலாடு திங்கள் முடியாய் போற்றி

ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி

அடியார்கட் காரமுத மானாய் போற்றி

காலை முளைத்த கதிரே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

3


2. பொ-ரை: எல்லாவற்றிற்கும் முன் உள்ள காரணப்பொருளே! மூப்படையாத உடலை உடைய முக்கண் பெருமானே! அன்பர்களுக்கு ஆபரணமே! கங்கைச் சடையனே! எலும்பாகிய அணிகலன்கள் உடையவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! கண்ணில் பரவியுள்ள ஒளியே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: முன்பு - எல்லாவற்றிற்கு முன்னுள்ள பொருள். முதல் - எல்லாப் பொருட்கும் அடிநிலை. மூவாத - மூப்படையாத; என்றும் ஒரு பெற்றியாய் உள்ள. அன்பாகி - அன்பர்களாய். அணியாய் - அணிமையில் உள்ளவனே; என்றது, 'அவர்கள் வேண்டுமிடத்து வெளிநிற்பவனே' என்றவாறு. 'எங்கும் (உடம்பெங்கும்) என்பாக' என்க. கண் பாவி நின்ற - கண்ணிற் பரவியுள்ள. கண், தீயின் கூறே ஆகலின், "கண் பாவி நின்ற கனலே" என்றருளிச்செய்தார். எனவே, 'கண் என்னும் பொறியாய் நிற்பவனே' என்றதாம்; இது, கனல் உருவமாய் நிற்பதனை நயந்தோன்ற அருளிச் செய்தவாறு.

3. பொ-ரை: மாலை மதியமே! என் சிந்தையில் நிலைபெற்று இருப்பவனே! இனித்தோன்றும் என் வினைகளைப் போக்குபவனே!