வருந்துகின்றேன் என்றார். அங்குள்ளோர், தீங்கு ஒன்றும் இல்லை; உள்ளே பள்ளி கொள்கின்றார் என்று விண்ணப்பித்தனர். அதைக் கேட்ட சுந்தரர், 'என் மனந்தெளிந்திலது; ஆதலால் நான் அவரைக் காணல் வேண்டும்' என்று கூறிச்சென்று பார்த்துத் திடுக்கிட்டு 'நானும் நண்ணுவேன் இவர் முன்பு' என்பவராய் உடைவாளைப் பற்றினார். பெருமான் அருளால் கலிக்காமரும் உய்ந்து 'கேளிரே யாகிக் கெட்டேன்' என விரைந்து எழுந்து வாளினைப் பற்றிக்கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் வணங்கினர். பின்னர் இருவரும் திருப்புன்கூர் சென்று பெருமானைத் தொழுதனர். இவ்வரலாற்றைச் சுந்தரர், 'ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து' (தி. 7 ப. 55 பா. 3) என்று அருளியுள்ளமை கண்டு மகிழத்தக்கது. கோட்புலி நாயனார்: 1 சோழநாட்டில் திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் குலத்தில் சிவபத்தியிற் சிறந்தவராய் கோட்புலியார் என்ற பெயருடையவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்தில் சேனாதிபதியாக விளங்கினார். அதில் தமக்குக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு சிவாலயங்களில் நிவேதனத்திற்கு நெல் வாங்கியளித்து வந்தார். ஒருசமயம் அரசன் ஆணைப்படி போர்மேற்செல்ல வேண்டியிருந்தது. தான் போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்வரை திருக்கோயில் நிவேதனத்திற்கு வேண்டிய நெல்லை வாங்கிவைத்து, சுற்றத்தவர்கள் அதை எடுத்துச் செலவழிக்காதிருக்கும்படியும் கூறிச்சென்றார். சில நாட்களில் பஞ்சம் வந்தது. சுற்றத்தவர்கள் உணவில்லாது இறப்பதைக் காட்டிலும் சுவாமி திருவமுதுக்காக உள்ள நெல்லை எடுத்து உண்டால் பின்னர்க்கொடுத்துவிடலாம் என்று எண்ணி நெல்லைச் செலவழித்தார்கள். கோட்புலியார் பகையை வென்று போர்முனையிலிருந்து மீண்டு வந்து அரசனிடம் நிதிக்குவை பெற்றுத் தம்மூரையடைந்து செய்தியறிந்தார். சுற்றத்தவர்களை வீட்டிற்குள் அழைப்பித்து, தமது கோட்புலி என்னும் பெயருடைய காவலாளனை வாயிற் காவலாக வைத்து, பெருமான் நிவேதனத்திற்கென்று வைத்திருந்த பொருள்களைச் செலவழித்த தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி, முதலிய சுற்றத்தவர்களையும் பணிவிடைக்காரர்களையும் வாளினால் துணித்தார். காவலாளன் 'அங்குப் பிழைத்திருந்த ஆண் குழந்தையைப்
1. தி. 12 பெரிய புராணம்
|