பார்த்து, இது அவ்வன்னத்தை உண்டதன்று. இக்குடிக்கு ஒரே பிள்ளை; இதனைக் கொல்லாதருள் செய்யவேண்டும்' என்று வேண்டினான். 'இது நெல்லை உண்ட தாயின்பாலை உண்டது' என்று கூறி அதனையும் கொன்றார். அப்பொழுது பெருமான் தோன்றி 'அப்பனே, உன் கைவாளினால் தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தவர்கள் சுவர்க்கத்தையடைய, நீ நம்முடன் வருவாயாக' என்றருளினார். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்திசுவாமிகள், "கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவாரூரன்" (தி. 7 ப. 15 பா. 10) என்று கூறியருளினார். தண்டியடிகள் நாயனார்: 1 சோழநாட்டில் திருவாரூரில் தண்டியடிகள் என்ற பெயருடைய ஒரு சிவனடியார் பிறவிக்குருடராய் இருந்தும், அகக்கண்ணால் பெருமானைத் தரிசித்து ஐந்தெழுத்தை ஓதி, பூங்கோயிலைக் காலங்களில் அணைந்து வழிபட்டு வந்தார். அவர், திருக்குளத்திற்கு அருகில் சமணப்பாழிகள் ஏற்பட்டு அதனால் திருக்குளம் குறைவடைந்து வருவதை அறிந்து திருக்குளத்தைப் பெருக்கத் திட்டமிட்டு, கரையிலும் திருக்குளத்திலும் தறி நட்டு அதில் கயிறுகட்டி அதைப் பிடித்துக்கொண்டு திருக்குளத்தை வெட்டினார். அதைக்கண்டு பொறாமையுற்ற சமணர்கள் "மண்ணைத் தோண்டினால் பிராணிகள் இறந்துபோம். அவற்றை வருத்தல் வேண்டாம்" என்றனர். அதைக் கேளாது தொடர்ந்து திருக்குளத் திருப்பணி செய்யும் தண்டியடிகளைப் பார்த்து ஏளனமாகக் 'கண்ணையன்றிக் காதினையும் இழந்தனையோ' என்று பலவாறு கூறி, 'நீ உன் கடவுள் அருளினால் கண் பெற்றாயானால், நாங்கள் இவ்வூரில் இரோம்' என்று சொல்லி மண்வெட்டி, தட்டு முதலியவற்றைப் பிடுங்கி எறிந்தனர். பின்னர் நாயனார் திருக்கோயில்முன் சென்று சிவபெருமானிடம் சமணர்கள் தனக்குச் செய்த அவமானத்தைப் பொறாது வருந்துகின்றேன். என் வருத்தத்தை நீக்கியருளல் வேண்டுமெனவேண்டி, திருமடத்திற்குச்சென்று அழுதுகொண்டேயிருந்து துயில் கொள்ளலானார். அவரது கனவில் பெருமான் தோன்றி "நாளைக்கு உன் கண்
1. தி. 12 பெரிய புராணம்
|