பக்கம் எண் :

131
 

காணவும், சமணர்கள் கண் மறையவும் அருள்செய்வோம்" என்று கூறி மறைந்து, சோழ அரசனுடைய கனவிலும் தோன்றி, 'தண்டி என்பவன் நமக்காகத் திருக்குளம்வெட்ட, சமணர்கள் அதற்கு இடையூறு செய்தனர். ஆதலால் தண்டியிடம் சென்று அவன் கருத்தை முடிப்பாயாக' என்றருளினார். அவ்வாறே அரசனும் தண்டியடிகளிடம் வந்து தமது கனவில் இறைவன் இட்ட கட்டளையைத் தெரிவித்து, அடிகள் கண்ட கனவையும், அடிகளுக்கு நேர்ந்த இடையூறுகளையும் கேட்டறிந்து, சமணர்களையும் அழைப்பித்து வினவினான். அதற்குச் சமணர்கள் 'அடிகள், கண்பெற்று, நாங்கள் கண் இழந்தால் இவ்வூரை விட்டு நீங்கி விடுகின்றோம்' என்று உறுதியளித்தனர்.

எல்லோருமாகத் திருக்குளக்கரைக்குச் சென்றனர். அங்கு அரசன் தண்டியடிகளை நோக்கி, 'நீர் பெருமானது திருவருளினாலே கண் பெறுதலைக் காட்டும்' என்றான். அவரும், யான், 'சிவபெருமானுக்கு அடியவன் என்றால் என்கண் ஒளிபெறவும் சமணர்கள் கண் இழக்கவும் செய்வர்' என்று கூறித் திருவஞ்செழுத்தை ஓதித் திருக்குளத்தில் மூழ்கி, கண் ஒளியுடன் எழுந்தார். சமணர்கள் கண் ஒளியிழந்தனர். இவற்றைக் கண்ட அரசன் திருவாரூரினின்றும் சமணர்களைத் துரத்தி அமண் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துத் திருக்குளத் திருப்பணியையும் நிறைவேற்றினான். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

"குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொடுசுடர்"

(தி. 7 ப. 72 பா. 10)

என்றருளியுள்ளமை காண்க.

திருநாவுக்கரசு நாயனார்: 1

திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருவாமூரில் குறுக்கையர் குடியில் புகழனார், மாதினியார் இவர்கட்குத் திருமகனாராய், திலகவதியாருக்கு இளவலாய்த் திருநாவுக்கரசர் தோன்றினார். அவருக்கு மருணீக்கியார் என்னும் திருநாமம் இட்டு வளர்த்தனர். சிவபத்தியிற் சிறந்தவரும், சேனைத்தலைவருமான கலிப்பகையார்


1. தி. 12 பெரிய புராணம்