என்ற ஒருவருக்குத் திலகவதியாரைத் திருமணஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்தனர். அப்பொழுது கலிப்பகையார், அரசன் ஆணைப்படி வடநாடு சென்று பகைவரோடு போரிட்டு வீரசுவர்க்கம் அடைந்தார். கலிப்பகையார் போருக்குச் சென்றபொழுது புகழனார் சிவபதம் அடைந்தார். மாதினியாரும் உடன் உயிர்நீத்தார். பின்னர், கலிப்பகையார் வீரசுவர்க்கம் அடைந்த செய்தியறிந்த திலகவதியாரும் உயிர்விடத் துணிந்து மருணீக்கியாரின் வேண்டுகோளால் அவருக்காக உயிர் வாழ்ந்தார். பின்னர் மருணீக்கியார், பல அறங்களை இயற்றி, சமயங்களின் நல்லாறு தெரிந்துணர்ந்து சமண சமயம் புகுந்து தருமசேனர் என்னும் பட்டம் பெற்றுத் தலைவராயிருந்து பௌத்தர்களை வாதில் வென்று புகழ் பெற்று விளங்கினார். அப்பொழுது திலகவதியார் வேண்டுகோட்படி பெருமான், தருமசேனர்க்குச் சூலைநோய் அருளினார். அது சமணர்களால் நீக்க முடியாமற்போகவே, அவர் திலகவதியாரை வந்து அடைந்து, அவர்கள் அஞ்செழுத்து ஓதிக் கொடுத்த திருநீற்றைப்பெற்று அணிந்து தமக்கையுடன் வீரட்டானேசுவரரை வலம் வந்து வணங்கிப் பெருமானருளால் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னும் திருப்பதிகம் பாடினார்; சூலை நீங்கியது. இறைவன் திருநாவுக்கரசு என்னும் திருநாமமும் வழங்கப்பெற்றார். பின்னர் பல தலங்களுக்கும் சென்று அங்கங்கும் திருப்பதிகம்பாடி வணங்கினார். சமண சமயத்தை நீங்கிச் சைவம் சார்ந்ததால் சமண மன்னன் செய்த, நீற்றறையில் இடுதல், நஞ்சு ஊட்டுதல், கொலையானையை ஏவுதல், கல்லிற்கட்டிக் கடலில் வீழ்த்துதல் ஆகிய தீங்குகளினின்றும் இறைவனருளால் நீங்கினார். பல தலங்களிலும் பல அற்புதங்களை நிகழ்த்திப் பெருமானை வணங்கிப் பதிகம் பாடி திருப்புகலூரில் "எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ" என்னுந் திருத்தாண்டகம் பாடி, இறைவன் திருவடி நிழலையடைந்தார். இவரது வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "இணைகொள் ஏழெழு நூறிரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்" (தி. 7 ப. 65 பா. 2) என்றும், "நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை" (தி. 7 ப. 67 பா. 5) என்றும்,
|