"தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை இருந்துநீர் தமிழோடிசை கேட்கும் இச்சையாற்காசு நித்தல் நல்கினீர்" (தி. 7 ப. 88 பா. 8) என்றும், "நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல் காசருளிச் செய்தீர்" (தி. 7 ப. 46 பா. 7) என்றும் மற்றும் பல விடங்களிலும் அருளிச்செய்துள்ளமை காண்க. திருநாளைப்போவார்: 1 சோழநாட்டைச் சேர்ந்த கொள்ளிட நதியின் பக்கத்தில் மேற்காநாட்டு ஆதனூரில் புலையர் குலத்திலே நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருமானின் திருவடிகளையன்றி மற்றொன்றையும் மறந்தும் நினையாது சிவாலயம் முதலியவற்றிற்கும் பிறவற்றிற்குமாக வேண்டும் தோற்கருவி, நரம்புக்கருவி முதலியவற்றைச் செய்து கொடுத்தலாகிய தம் தொழிலைச் செம்மையாகச் செய்து திருக்கோயில் திருமுன்னின்று அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப்பாடி யாடி வணங்குவார். ஒருநாள் திருப்புன்கூர் இறைவரை வணங்கிச் சென்றார். அங்குப் பெருமான் நந்தியை விலகச்செய்து காட்சி கொடுத்தார். நந்தனார் அந்த ஊரிலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளம் ஒன்று வெட்டி ஊர் திரும்பினார். இவ்வாறே பல தலங்களையும் வணங்குவாராயினார். ஒரு நாள் சிதம்பரத் தரிசனம் செய்யவேண்டும் என்று விரும்பினார். கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியாதே என்று வருந்தி நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேன் என்று அநேக நாட்களைக் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப் போவார் என்னும் பெயர் உண்டாயிற்று. பல நாட்கள் கழிந்தபின் ஒருநாள் சிதம்பர தரிசனத்திற்குப் புறப்பட்டுச்சென்று உள்ளே போதற்கஞ்சி ஊர்ப்புறத்தே வணங்கி வலஞ்செய்து தங்கினார். இவ்வாறே நாள்தோறும் இரவும் பகலும் வலஞ்செய்து வந்து ஒருநாள் தம் இழிபிறப்பை எண்ணி வருந்தித் துயின்றார். அன்று இரவு கனவில் பெருமான், 'நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து
|