"வெள்ளானை வேண்டும்வரம் கொடுப்பர் வெண்காடு மேவிய விகிர்தனாரே" -தி. 2 ப. 35 பா. 9 என்னும் அப்பர் பெருமானின் இத்தலத் தேவாரப் பகுதியாலும், "அயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடு" -தி. 2 ப. 48 பா. 7 என்னும், ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று. அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் இருக்கின்றன. சைவ எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார். அது அச்சில் வெளிவந்துள்ளது. 82. திருவெண்ணெய்நல்லூர் இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு கி. மீ தொலைவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர் : தடுத்தாட்கொண்டநாதர். இறைவி : வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம் : பெண்ணையாறு.
|