பக்கம் எண் :

344
 

கல்வெட்டு :

1 திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராசன், கோப்பரகேசரி பன்மரான இராசேந்திரதேவன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டியன் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராயர், குமாரமல்லி கார்ச்சுனராயர், கிருஷ்ணதேவராயர் இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் இராஜநாராயண சம்புவராயர் காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர் : இக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் இறைவர், முதலாம் இராசராசன் கல்வெட்டில், திரு வெண்ணெய் நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராசன் முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

குறிக்கப்படும் திருமேனிகளுல் சில திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரி கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டில் திருக்காமகோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் 'தில்லைவ . . . . நன் பிள்ளையார்' என்பது மாத்திரம் கிடைக்கின்றது.


1. A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 - 420 - 483, S.I.I Vol. VII No. 938 - 948; S.I.I. Vol. XII The Pallavas.