பக்கம் எண் :

345
 

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி : 'பூமருவிய திசைமுகத்தோன் படைத்த பெரும்புவி விளங்க' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளிவித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்த விட்டது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள் : இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும்.

இச்செய்திகள் 'பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய்தவத்தால் பருதிவழித்தோன்றி' என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடை இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி. பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரபெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம்பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

திருச்சின்னத்துக்குப் 'பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தரமூர்த்தி சுவாமியை நோக்கி 'நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், 'போதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்' என்றார். அதற்கு இறைவர் 'முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்தனென்றே பாடுவாய்' என்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் 'பித்தாபிறைசூடீ' எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை உறுதிப் படுத்துகின்றது.