கோயில் கட்டப்பெற்ற காலம் : ஈண்டுக் குறிக்கப்பெற்றுள்ள இராசகேசரிவன்மர் என்பவர் முதலாம் இராஜராஜமன்னராவர். இவர் கி. பி. 985 முதல் 1014 வரை சோழமண்டலத்தை ஆண்டவர். இவர் அரியணை ஏறிய கி. பி. 985 உடன் ஏழைக் கூட்ட கி. பி. 992 ஆகின்றது. எனவே கோயில் கட்டப்பெற்று இற்றைக்கு 963 ஆண்டுகள் ஆகின்றன. கோயில் நிலைபெற்றுள்ள இடம் : இத்திருக்கோயில் சிவநெறிக் குரவராகிய திருநாவுக்கரசுப் பெருந்தகையார் காலத்தில் (கி. பி. ஏழாம் நூற்றாண்டில்) காவிரியின் நடுவில் இருந்தது. இச்செய்தி "பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானை" என்னும் அவரது தேவாரப் பகுதியால் விளங்கும். அது கருதியே இதற்குத் துருத்தி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. துருத்தி எனினும் அரங்கமெனினும் ஒக்கும். துருத்தி என்பதற்கு ஆற்றிடைக் குறை என்பது பொருள். ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் இக்கோயில் இறைவரைக் "காவிரி அகன்கரை உறைவார்" எனக் குறித்துள்ளனர். எனவே சுந்தரர் காலத்தில் இது காவிரிக்கரைக் கோயிலாக விளங்கிற்று. பத்தாம் நுற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த முதலாம் இராஜராஜசோழன் கல்வெட்டு இக்கோயிலைக் காவிரித் தென்கரைக் கோயில் என்றே குறிப்பிட்டுள்ளது. இச்செய்தியைத் "திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்ட கோவிராசகேசரி பன்மற்கு ஆண்டு 17 ஆவது தென்கரை உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் தேவதானம் வீங்குநீர்த்துருத்தி சொன்னவாறு அறிவார் ஆடுகின்ற பொற்பலகை விடங்கருக்கு" என்னும் கல்வெட்டுப் பகுதி அறிவிக்கின்றது. இறைவரின் திருப்பெயர் : இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்குச் சொன்னவாறு அறிவார், கற்றளியுடையமகாதேவர், வீங்கு நீர்த்துருத்தி யுடையார் என்னும் பெயர்கள் வழங்கப்பெற்றுள்ளன. இவற்றுள் கற்றளியுடைய மகாதேவர் என்ற பெயர் கங்கைகொண்ட சோழனது நான்காம் ஆண்டுக் கல்வெட்டில்தான் முதன்முதல் காணப்படுகின்றது.
|