பக்கம் எண் :

350
 

காஞ்சீபுரம் போகும் வரையில் அவர்முன்னே இறைவியர் மின்னல்போலத் தோன்றித் தோன்றி மறைந்த காரணத்தால் இப்பெயர் வந்தது என்பர்.

தலவிருட்சம் : இலந்தை மரம்.

இங்குள்ள நந்தியெம்பெருமானின் வலது கொம்பு சிறிதளவு ஒடிந்திருக்கின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஊன்றுகோல் பட்டு அது ஒடிந்துவிட்டது என்பர். இந்நந்திதேவர்க்கு அருகில் சுந்தரமூர்த்தி நாயனாரது கல் பிரதிமை ஊன்றுகோலுடன் எழுந்தருளி விக்கப்பட்டுள்ளது.

84. திருவேள்விக்குடி

சிவபெருமானின் திருக்கல்யாண வேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் குற்றாலம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 5 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களில் 23 ஆவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து மகாராஜபுரம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இறைவன் திருப்பெயர் - கல்யாணசுந்தரேசுவரர். இறைவியின் திருப்பெயர் - பரிமளசுகந்தநாயகி. இத்தலம் திருத்துருத்தியோடு சேர்த்துப் பாடப்பெற்றிருக்கிறது. இறைவர் பகற்காலத்தில் வேள்விக் குடியிலும், இரவில் திருத்துருத்தியிலும் எழுந்தருளியிருப்பதாகப் பதிகத்தால் அறியக்கிடக்கின்றது.

கோயிலைக் கட்டியவர் :

இத் திருக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியவர் உத்தம சோழனது தாயராகிய செம்பியன்மாதேவியாராவர். இச்செய்தி இக்கோயில் கருப்ப இல்லின் பின்புறச் சுவரின் கிழக்கிலும் வடக்கிலும் பொறிக்கப்பெற்றுள்ள "இத்திருக் கற்றளி எடுப்பித்து இ தேவர்க் . . . . . ஸ்ரீ உத்தமசோழதேவரைத் திருவயிறுவாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன்மாதேவியார் கோராசராசகேசரிபன்மர்க்கு ஆண்டு எ - வதில்" என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.