பக்கம் எண் :

367
 

துள்ளேன். இவன் முன்போல் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்வீரேயாயின அவ்வோலையைக் காட்டுவேன்' என்றார். அவையத்தாரும் அதற்கு உறுதியளித்தனர். முதியவர் மூல ஓலையாகிய ஆவணத்தை அவையோரிடம் கொடுத்தார். கரணத்தான் ஓலையைப் படிக்கத் தொடங்கினான்.

"திருநாவலூரில் இருக்கும் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது. வெண்ணெய்நல்லூரில் வாழும் முனிவர்பெருமானாகிய பித்தனுக்கு யானும் என் குடும்பத்து வழிவழியாக வரும் மரபினரும் அடித்தொண்டு செய்வதற்கு இதுவே ஆவண ஓலையாகும். உளம் ஒத்த நிலையில் இதனை எழுதிக்கொடுத்தேன். அதற்கு இவை என் எழுத்து" இவ்வாறு எழுதப்பட்ட ஓலை வாசகத்தைச் சபையோர் கேட்டனர். சாட்சிக் கையெழுத்து இட்டவர்களது கையெழுத்துக்களையும் ஒப்ப நோக்கி இவை ஏற்றுக்கொள்ளத்தக்கன என ஒத்துக் கொண்டனர். பின் நம்பியாரூரரை அழைத்து 'உன்னுடைய பாட்டனாரின் கையெழுத்து இதுதானா' என்பதை தெளிவாகப் பார்த்தறிக எனப் பணித்தனர்.

அப்போது அங்கு நின்ற கிழவர் அவையினரை நோக்கி 'முன்னர் ஆவண ஓலையைக் கிழித்த இவனா இம் மூல ஓலையைப் பார்த்தற்குத் தகுதியுள்ளவன். இவனது பாட்டன் எழுதிக்கொடுத்த வேறு கைச்சாத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து நியாயம் கூறுங்கள் என்றார்.

அவ்வாறே அவையோர் ஒப்பிட்டுப் பார்த்துக் கையெழுத்துக்கள் ஒத்திருப்பதைக்கண்டு 'இம் மறையோர் வழக்கை மறுப்பதற்கு இனி ஒரு காரணமும் இல்லை; இம் முனிவருக்கு நீர் தோற்றுவிட்டீர். அவருக்கு அடிமை செய்தலே உனது கடமையாகும்' என்று முடிவு கூறினர்.

நம்பியாரூரரும் அவையோர் முடிவை ஏற்று உடன்பாடு அறிவித்தார். அதன்பின் அவையினர் அவ்வந்தணரைநோக்கி 'நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராக ஓலையில் குறிப்பிடப் பெற்றுள்ளதே, இவ்வூரில் உமது வீட்டையும், வாழ்க்கைச் செல்வத்தையைும் எங்களுக்குக் காட்டுக' என்றனர். பொருவருவழக்கில் வென்ற புண்ணிய முதல்வராகிய மறையவர் 'உங்களில் ஒருவரும் என்னை அறியீராயின் என்னுடன் வருக' என்று சொல்லி நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து