பக்கம் எண் :

371
 

திறமறிந்து மகிழ்ந்து காழிப்பெருமான் அம்மையப்பராக விடைமேல் தோன்றிக் காட்சி வழங்கினான். அவ்வருட்காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர் "சாதலும் பிறத்தலும்" என்னும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

பிறகு திருக்கோலக்கா, திருப்புன்கூர் முதலிய தலங்களை வணங்கத் திருப்பதிகம் பாடிக் காவிரியில் நீராடி, அதன் தென்கரையை அடைந்தார், மயிலாடுதுறை, அம்பர்மாகாளம், திருப்புகலூர் ஆகிய தலங்களை வணங்கித் திருவாரூர் எல்லையை அடைந்தார்.

தம்பிரான் தோழராதல் :

திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் ஆரூரில் வாழும் அடியார்கள் கனவில் தோன்றி "நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக" எனக் கட்டளையிட்டார். தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள. திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கலவாத்தியங்களுடன் சென்று வன்றொண்டரை எதிர்கொண்டழைத்தார்கள்.

நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார்களைத தொழுது, "எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்ற கருத்துக்கொண்ட "கரையும் கடலும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி கொண்ட திருக்கோயில் வாயில் அணுகினார். சிவனடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது உள்ளே சென்று பூங்கோயிலமர்ந்த பெருமானை வணங்கி இன்புற்றார். இன்னிசைப் பாமாலைகளாகிய தமிழ் மாலைகள் பாடினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானிடையே "நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக' என்ற அருள்வாக்குத் தோன்றிற்று. அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார், தியாகேசர் திருமுன்சென்று வலம்செய்து வணங்கினார்.

அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் 'தம்பிரான் தோழர்' என்று அழைத்தனர். இறைவன் கட்டளைப்படிதிருமணக்