கோலத்தோடு தூய தவ வேந்தராய்ப் பூங்கோயிலமர்ந்த பிரானை நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர். பரவையார் திருமணம் : திருக்கயிலாய மலையில் பார்வதிதேவியாருடைய சேடியர்களாய் ஆலாலசுந்தரரால் காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத் திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து மங்கைப் பருவம் எய்தினார். பார்வதிதேவிக்குத் தொண்டு புரிந்த பண்டையுணர்வு செலுத்துதலால் பரவையார் நாடோறும் திருக்கோயிலை வழிபடும் கடமையுடையராய் விளங்கினார். பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் தம்பிரான் தோழராகிய சுந்தரர் சிவபிரானை வணங்கிக் கொண்டு அடியார்கள் சூழத் திரும்பிவருங்கால் ஊழ்வினை கூட்டப் பரவையாரைக் கண்டார். காதல் கொண்டார், பரவையாரும் பண்டை நல்விதி கூட்ட நம்பிகளைக் கண்டு காதல் கொண்டார். அச்சம் நாண் மடம் பயிர்ப்பு ஆகிய பெண்மைக் குணங்கள் ஒருபுடை சாய்ந்தன. எனினும் வன்றொண்டர்பால் ஈடுபட்ட மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பரவையார் பூங்கோயிலுக்குள் சென்று பெருமானை வழிபட்டார். இவ்வாறு,பரவையார்தம் பேரழகில் ஈடுபட்ட நம்பியாரூரர் அயலே நின்றவர்களை நோக்கி 'என் மனம் கவர்ந்த இவள்யார்' என்று கேட்டார். அருகில் இருந்தோர் அவர்தாம் நங்கை பரவையார் வானோர்க்கும் தொடர்வரிய தூய்மையுடையார்' எனக் கூறினர். வன்றொண்டர் பரவைபால் எல்லையற்ற காதலுடையவராய் 'என்னை யாட்கொண்டருளிய இறைவனையடைந்து என் கருத்திற்கு இசைவு பெறுவேன்' என்று எண்ணிய வண்ணம் இறைவன் திருமுன் சென்று பரவையாரைத் தமக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தரவேண்டிப் பணிந்தார். பரவையார் வன்மீகநாதரை வலம்செய்து அங்கிருந்து வேறொருபுறமாகப் புறப்பட்டுத் தம் மாளிகை சென்றார். 'என் உயிர் போன்ற பரவை எங்கே சென்றாள்?' என்று தேடிச்சென்றார் சுந்தரர். ஆரூர்ப் பெருமான் பரவையை எனக்குத்தந்து என் ஆவியை நல்குவர்
|