பக்கம் எண் :

373
 

என்னும் உறுதிடையராய் வெளிவந்து தேவாசிரிய மண்டபத்தின் ஒருபுடை அமர்ந்திருந்தார். மாலை நேரம் வந்தது.

பரவையாரும் தம்பிரான் தோழர்பால் தம்மனம் ஈடுபட்டதை எண்ணியவாறே தம்மாளிகையை அடைந்து மலர் அமளியிலமர்ந்து அருகிலிருந்த பாங்கியை நோக்கி 'நாம் பூங்கோயில் சென்ற பொழுது நம் எதிரே வந்தவர் யார் என்றனர்', தோழியர் 'அவர் நம்பியாரூரர், தம்பிரான்தோழர், சிவபிரானால் வலிய ஆட்கொள்ளப் பெற்றவர்' எனக்கூறினர். அதுகேட்ட பரவையார் 'எம்பிரான் தமர்' என்றுரைப்பதைக் கேட்ட அவர்மேல் பெருங்காதல் கொண்டார். அமளியில் வீழ்ந்து வெதும்பிப் பலவாறு புலம்பி வருந்தித் தம் வேதனையை நீக்கியருளுமாறு இறைவனை வேண்டினார்.

சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினார். சுந்தரர் கனவிலும் தோன்றி "நங்கை பரவையை உனக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தந்தோம்" என்று கூறினர். பொழுது புலர்ந்தது, அடியார்கள் திரண்டு வந்து வன்றொண்டர்க்கும் பரவையார்க்கும் விதிப்படித் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர். சுந்தரர் பரவையாருடன் கூடி சிவபிரானருட் கடலில் திளைக்கும் சிவயோகச் செல்வராய்ச் செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிச் சிவபிரானைப் போற்றி மகிழ்ந்திருந்தார்.

திருத்தொண்டத்தொகை பாடியருளியது :

வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் பூங்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டார். தியாகேசன் திருக்கோயிலை அடைந்தார், அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து அவர் முன் காட்சி வழங்கி அடியார்களின் பெருமையை அவர்க்கு உணர்த்த விரும்பிச் சுந்தரரை நோக்கி "அடியார் பெருமையை எடுத்துக்கூறி இத்தகைய அடியார்கள் கூட்டத்தை நீ அடைவாயாக" என்றருளிச் செய்தார்.

சிவபிரான் அருளியதைக் கேட்ட சுந்தரர் நான் 'நல்நெறி அடையப் பெற்றேன்' என்று கூறித் துதித்தார். பெருமான் அவரைப் பார்த்து "முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக"