என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், "அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்" என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது : நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத்தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளைபொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய படித்தரங்களில்லாமைக்கு மனங்கவன்று உணவு கொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி "ஆரூரனக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம்" என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் 'இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து"நீளநினைந்
|