தடியேன்" என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். 'இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக் கொண்டுவந்து குவிக்கும்' என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார். அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டுவந்து திருவாரூரில் பரவையார் மாளிகையிலும் திருவீதிகளிலும் நிரப்பின, காலையில் நெற்குவியலைக்கண்டு வியந்து மகிழ்ந்த பரவையார் 'அவரவர்கள் வீட்டுமுகப்பிலுள்ள நெல்லை அவர்களே எடுத்துகொள்ளலாம்' எனப்பறையறைவித்தால். ஆரூர் வாழ் மக்களனைவரும் நெல்பெற்றுச்சுந்தரரைப் போற்றினர். சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்தார். கோட்புலிநாயனார் உபசாரம் : சுந்தரர் திருவாரூரில் இனிதுறையும் நாட்களில் சோழ மன்னனுடைய சேனைத்தலைவரும் திருக்கோயில் 'திருவமுதுக்கு வேண்டும் செந்நெல்லைச் சேகரித்தளிக்கும் திருத்தொண்டரும் வேளாளருமாகிய கோட்புல நாயனார் தம் ஊராகிய திருநாட்டியத் தான்குடிக்கு எழுந்தருளுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோட்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவழுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வளப்பகை யென்னும் பெண்கள் இருவரையும் அழைத்து வணங்கச் செய்து தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் 'இவர்கள் என் குழந்தைகள்' என்று சொல்லி அன்போடு மடி மீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளிய சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக் கோயிலையடைந்து "பூணாணாவ தோரரவம்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
|