பக்கம் எண் :

376
 

பொன் பெறுதல் :

நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர் மீண்டும் திவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருவதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடையை அதன் மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந் தெழுந்த சுந்தரர் தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டுவியந்து திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது "தம்மையே புகழ்ந்து" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.

ஆடல் காட்டியருளல் :

புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர் திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி யருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர் திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுது திருவாரூரையடைந்து ஆரூர்ப் பெருமானை வழிபட்டுப் பரவையாருடன் மகிழ்ந்திருந்தார்.

இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டு நன்னிலம் வீழிமிழலை, திருவாஞ்சியம், நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப் புத்தூர் ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலய நல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத்தரிசித்துக் கொண்டு திருவாலம் பொழிலையடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது சிவபெருமான் அவர்கனவில் தோன்றி 'மழபாடிக்குவருதற்கு மறந்தாயோ' என வினவி மறைந்தார், துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர் காவிரியைக் கடந்து திருமழபாடி சென்று இறைவனை வணங்கிப் 'பொன்னார் மேனியனே' என்று தொடங்கித்திருப்பதிகம் பாடிப்போற்றினார்.