பக்கம் எண் :

377
 

பின்னர் காவிரியின் இருமருங்குமுள்ள தலங்களை வழிபட விரும்பித்திருவானைக்காவை யடைந்தார். இறைவனை வழிபட்டு அங்கிருந்து திருப்பாச்சிலாச்சிராமத்தை யடைந்து தமக்குப் பொன்னைத்தந்தருள வேண்டுமென்னும் குறிப்புடன் பெருமானை வணங்கினார். இறைவன் பொன்னைத்தந்தருளாமையால் இறைவன் பால் மனப்புழுக்கம் கொண்டு "வைத்தனன் தனக்கே" என்று தொடங்கிப்பதிகம்பாடி 'இவராலதில்லையோ பிரானார்' என இகழ்ந்து கூறிப் பின் அதனையே பொறுத்தருளவேண்டு மென்று திருக்கடைக் காப்பும் அருளிச்செய்தார். இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார்.

பொன் பெற்ற சுந்தரர் அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிப்பட்டுக் கொண்டே கொங்கைநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி "மற்றுப்பற்றெனக்கின்றி" யென்னும் நமச்சிவாயத் திருபதிகம்பாடிப் போற்றினார். பின்பு காஞ்சி வாய்ப்பேரூரை அடைந்து திருக்கோயில் சென்று வழிபட்டார். அங்குப் பெருமான், தில்லை மன்றுள் நின்றாடும் தமது திருக்கோலத்தோடு காட்சி வழங்கியருளினார்.

அவ்வருட் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், 'தில்லையம் பலவன் திருக் கூத்தைக் கும்பிடப்பெற்றால் புறம்போய் எய்துதற்கு யாதுளது' என்று எண்ணிப் பேரூரினின்றும் புறப்பட்டுத் தில்லையை நோக்கிச் செல்வராயினார். வெஞ்சமாக்கூடல், கற்குடி, ஆறை மேற்றளி, இன்னம்பர், புறம்பயம் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே நடு நாட்டுக் கூடலையாற்றூரை அணுகியவர் அங்குச் செல்லாமல் திருமுதுகுன்றை நோக்கிச் சென்றார், அப்பொழுது கூடலையாற்றூர் இறைவன் மறையவர் வடிவம் தாங்கி வழிப் போக்கராய் வன்றொண்டரை அணுகினார், சுந்தரர் மறையவரைப் பணிந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழியை வினவினார். மறையவர் 'கூடலையாற்றூரை அடையச் சென்றது அவ்வழி' எனக் கூறித் துணையாய்த்தாமும் ஊர் எல்லையளவும் உடன் சென்று மறையவர் மறைந்தருளினார். உடன் வந்த அந்தணரைக் காணாத சுந்தரர் மறையவர் உருவில் வந்தவர் பெருமானே யென்பதறிந்து திருக்கோயிலை யடைந்து "வடிவுடை மழுவேந்தி" யென்று தொடங்கி வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைந்தார்.