பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்து எதிர்கொள்ளுமாறு மத்தயானை அருள் புரிந்தார். அதில் ஏறிச் சேரமான் பெருமானை நினைந்த வண்ணம் திருக்கயிலை சேர்ந்தார். சேரர் பெருமாளும் குதிரை மீதேறி, அதன் காதில் அஞ்செழுத்து ஓத, அஃது ஆகாயத்தில் சென்று, சுந்தரர் செல்லும் யானையை வலம் வந்து முன்சென்றது. திருக்கயிலையில் திரு அணுக்கன் திருவாயில் வரை சேரரும் சென்றார். நந்தியெம் பெருமான் சுந்தரருக்கு மட்டும் அருளிப்பாடு அறிவித்தார். சுந்தரர் பெருமானைக்கண்டு வணங்கி வழிபட்டார். சேரர் திருவாயில் புறத்தினர் சேவிக்க அருள்பாலிக்க வேண்டினார். சேரருக்கும் அருளிப்பாடு கிடைத்தது. இந்த இடைவெளியில் சேரமான் பெருமாள் 'ஞானஉலா' என்னும் ஆதி உலாவை இயற்றிப் பெருமான் திருமுன்பு அரங்கேற்றினார். சுந்தரர் களையா உடலொடு திருக்கயிலை சேர்ந்தார் என்பது அவர்தம் வரலாற்றாலும் திருவிசைப்பாப் பாடலாலும் தெளிகிறோம். முத்தியானது, விதேக முத்தி, சதேக முத்தி என இருவகைப்படும். விதேக முத்தி என்பது உடலைவிட்டு உயிர் பிரிந்து இறையருளை ஒன்றுதல், சதேக முத்தி என்பது உடலுடனேயே இறையருளைப் பெற்று இன்புறுதல். சுந்தரரும் சேரமான் பெருமாளும் அடைந்த முத்தி சதேக முத்தி எனப்படுகிறது. 'ச' என்பது உடன் என்று பொருள் தரும். உடம்புடனே என்பது பொருளாகும். சுந்தரர் ஆலால சுந்தரராய் முன்பு செய்த அணுக்கத் தொண்டராம் பேறு பெற்றார். சேரர் பெருமான் கணங்களுக்குத் தலைவராம் பேறு உற்றார். அநிந்திதை, கமலினி இருவரும் தேவியர் கோயிலில் தம் தொழில்வழி நின்றனர். சுந்தரர் யானை மீதேறி ஓதிய நொடித்தான்மலைப் பதிகத்தை வருணன் வாயிலாக அஞ்சைக்களத்து அப்பருக்கு அனுப்பி வைத்தார். சேரர் பெருமான், பிடவூர் மாசாத்தனார் வாயிலாகத் தமது ஞான உலாவை இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். திருக்கயிலையினின்றும் பூவுலகிற்கு இருமாதர்கள் காரணமாக வந்த சுந்தரர் அக்காதல் வாயிலாகத் தாம் கொண்ட மையல் தீர்ந்ததோடு பெருமானின் அருள்வழி நின்று திருத்தொண்டத்தொகை முதலான தேவாரப் பதிகங்களால் சிவநெறிக்கருவூலத்தை மன்பதைகட்கெல்லாம் வழங்கியருளி மாறாத பேரின்பவாரிதியில் மன்னி வாழ்கிறார். அருள்விளக்கும் சுந்தரர் தேவாரத்தைப் பொருள் உணர்வுடன் படித்தும் பாடியும் தெளிந்து உறுதியுடன் சிவநெறி கடைப்பிடிக்க வெளிவரும் இச்சுந்தரர் செந்தமிழைப் போற்றி வாழ, ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம். சுந்தரர் செந்தமிழ் போற்றுவோம் நந்துயர் பொன்றிடச் சாற்றுவோம்.
|