பக்கம் எண் :

585
 
189.வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்

ளார்வடி வார்ந்தநீறு

பூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம்

புண்ணியத்தார்

நேசத்தி னால்என்னை ஆளுங்கொண்

டார்நெடு மாகடல்சூழ்

தேசத்தி னார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே. 

2

190.அங்கையின் மூவிலை வேலர்

அமரர் அடிபரவச்

சங்கையை நீங்க அருளித்

தடங்கடல் நஞ்சமுண்டார்

மங்கையொர் பாகர் மகிழ்ந்த

இடம்வளம் மல்குபுனற்

செங்கயல் பாயும் வயல்பொலி

யுந்திரு நின்றியூரே. 

3



2. பொ-ரை: மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும், அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும், சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும், அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும், நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.

கு-ரை: "வாசத்தின் ஆர்" என்புழி இன், வேண்டாவழிச் சாரியை. பூசம், அம்மீற்றுத் தொழிற் பெயர். "ஆளும்" என்னும் உம்மை, சிறப்பு. "தேசம்" என்றது, உலகத்தை.

3. பொ-ரை: அகங் கையில் மூவிலை வேலை (சூலத்தை) உடையவரும், தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க, அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து, பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர், உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம், வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே.