பக்கம் எண் :

783
 
432.காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக்

கதிர்மாமணி சந்தன மும்மகிலும்

சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித்

திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்

பாடல்முழ வுங்குழ லும்மியம்பப்

பணைத்தோளியர் பாடலொ டாடலறா

வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

8



நடனமாட வல்லவனே, வெள்ளிய இடபத்தை விரும்பியவனே, நல்லோனே, கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, புள்ளிகளையுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய, பருத்த, பசிய கண்களையுடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற, நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: 'துத்திப் படம்' எனக் கூட்டுக. 'எயிற்றோடு' என்பது வேறுவினை ஓடு. ''அழல்'' என்றது, அழல்போலும் வெய்தாய உயிர்ப்பினை. பாம்பிற்கு அருமையாவது, தீண்டப்படுதல் கூடாமை.

8. பொ-ரை: ஒளியையுடைய சிறந்த மணிகளையும், சந்தனத்தையும், அகிலையும், 'முல்லை, குறிஞ்சி, மருதம்' என்னும் நிலங்களில் சிதறி, 'சேடன்' என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து, கரையைப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, தம் பாடலுக்கு இயைந்த மத்தளமும், குழலும் ஒலிக்க, பருத்த தோள்களையுடைய மாதர்கள் பாடுதலோடு, ஆடுதலைச் செய்தல் ஒழியாத கூத்தர் விரும்பும் திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: வேடர் - கதையிற் சொல்லப்படுவோர்போல வேடம் புனைந்து ஆடுபவர்: இவரை, 'பொருநர்' என்ப. இவர் விரும்புதல் பரிசில் மிக வழங்குவோர் உளராதல் பற்றி. ''நாஅடும்'' என உயிரளபெடை வந்தது. அளபெடையின்றி ஓதுதல் கூடாமையறிக.