557. | கூடி னாய்மலை மங்கையை நினையாய் | | கங்கை யாயிர முகமுடை யாளைச் | | சூடினாய் என்று சொல்லிய புக்கால் | | தொழும்பனே னுக்குஞ் சொல்லலு மாமே | | வாடி நீயிருந் தென்செய்தி மனமே | | வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி | | ஊடி னால்இனி யாவதொன் றுண்டே | | ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | | 8 |
சுவாமிகளது உண்மைநிலை இதுவேயாகவும், அவர்மாட்டு இறைவன் இவையெல்லாம் நிகழச் செய்தது, உலகிற்கு உணர்வுண்டாக்கவே என்பது இதனாற் கடைப்பிடித்துணர்ந்துகொள்க. 8. பொ-ரை: 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, 'நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய்; பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய்; இதனை நினைகின்றிலையே' என்று சொல்லப்புகுந்தால், அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ! 'மனமே நீ துன்ப முற்று என்ன பெறப்போகின்றாய்' என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு. யான் அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னித்திலே பிணங்கினால், இனி வருவதொன்று உண்டோ? கு-ரை: 'யான்' கொண்டது நீ முன்பு செய்து காட்டிய வழியேயன்றோ; என்னை ஒறுப்பது என்' என்பதனை அடிமையாகிய நான் சொல்லுதல் கூடுமோ என்றவாறு. 'தொண்டனேனுக்கும்' என்னும் உம்மை, இழிவு சிறப்பு. "மனனே" என்றதன்பின். 'என்று' என்பது தொகுத்தலாயிற்று; இவ்வாறன்றி, இறைவனை நோக்கிக் கூறிமுடித்தபின், மனத்தை நோக்கிக்கூறி இரங்கி நின்றதாக வேறாகவே வைத்துரைப்பினுமாம். இறைவன் காட்டிய வழியே செய்ததாவது, பரவையாரை மணந்தபின், சங்கிலியாரை மணந்தமை. இச்செயலிடத்துச் செய்யும் சூள் சூளன்று என்பது, உன் செயலாலே அறியப்பட்டதே என்றல் திருவுள்ளம்.
|