556. | மற்றுத் தேவரை நினைந்துனை மறவே | | னெஞ்சி னாரொடு வாழவு மாட்டேன் | | பெற்றி ருந்து பெறாதொழி கின்ற | | பேதை யேன்பிழைத் திட்டதை யறியேன் | | முற்று நீயெனை முனிந்திட அடியேன் | | கடவ தென்னுனை நான்மற வேனேல் | | உற்ற நோயுறு பிணிதவரிர்த் தருளாய் | | ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | | 7 |
உள்ள தோழமை உரிமையால், எவற்றையும் நெருங்கி வேண்டி எளிதிற் பெற்றேவிடுவாராக, இது போது அது கூடாதாயினமைபற்றி, "நானும் இத்தனை வேண்டுவது" என்றார். உயிரோடே நரகத்து அழுந்துதலாவது, கண்ணிழந்து அலமருதல். 7. பொ-ரை: 'ஒற்றியூர்' என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, நான் பிறர் ஒருவர் தேவரை நினைந்து உன்னை மறந்தேனில்லை; அத்தன்மையான நெஞ்சை யுடையவருடன் சேர்ந்திருக்கவும் மாட்டேன்; அங்ஙனமாக, நீ என்னை முற்றும் வெகுளுமாறு, உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாதொழகின்ற பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன்; நான் உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவேனாயினேன். இதன்மேல், உன் அடியேனாகிய யான் செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதொரு கடமை யாது! ஒன்றுமில்லையாதலின், யான் உற்ற துன்பத்தையும், மிக்க பிணியையும் நீக்கியருள். கு-ரை: சுவாமிகள் உடம்பிற் பிணியும் பெற்றமை யறிக. 'திருவாரூரில் உள்ள தேவனும், ஒற்றியூரிலுள்ள நீயேயன்றி வேறொருவன் அல்லனே' எனவும், 'நல்லனவாயினும், தீயனவாயினும் என் செயற்கு நானே முதல்வனாவது, உன்னை மறந்து செய்யினன்றோ' எனவும், அங்ஙனமின்றி 'உன்னையே நினைந்து செய்யும் யான் குற்ற முடையேனாயது இவ்வாறு என்பது விளங்குகின்றதில்லை' எனவும், 'உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவாமைக்குமேல், உயிர்கள் பெறுந்தூய்மையாவது ஒன்று உண்டோ' எனவும் அருளியவாறு. 'இமைப்பொழுதும்' என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது.
|