பக்கம் எண் :

9
 

"மழுவாள் வலனேந்தி" என்னும் (தி. 7 ப. 1 பா. 9) ஒன்பதாம் பாடலில் குறிப்பிடுகிறார்.

வேண்டிக்கொள்வேன் தவநெறியே :

சுந்தரர் தலயாத்திரை மேற்கொள்கிறார். முதலில் திருத்துறையூர் செல்கிறார். அத்தலம் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. திருத்துறையூர்ப் பெருமான் சிட்டகுருநாதர். அவரிடம், அவரைப் போற்றி, பத்துப்பாடல்களிலும் தவநெறி வேண்டுகிறார். முதல் பாடலில் பெண்ணை ஆற்றின் வடபால் உள்ள துறையூர் என்பதைக் குறிப்பிடுகிறார். அப்பாடல் காண்க.

மலையார் அருவித் திரள்மாமணி உந்திக்
குலையாரக் கொணர்ந்து எற்றியோர் பெண்ணை வடபால்
கலையார் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்த்
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே.

- தி. 7 ப. 13 பா. 1

யோகநெறி விளக்கவந்த சுந்தரர், திருவருளால் எடுத்த எடுப்பிலேயே தவநெறி வேண்டும் சால்பு, நெறிப்படுத்தும் இறை ஆட்சியின் ஏற்றத்தை இனிது உணர்த்துவதாயுள்ளது.

தவநெறி மேற்கொள்வோர் முதலில் பெற வேண்டியது சிவ தீட்சை. சுந்தரர்க்கோ திருவதிகையில் முடிவான திருவடி தீட்சையே கிடைத்துவிட்டது. திருவடி தீட்சை பெற்றவர் மனம் எப்போதும் சிவக்கொழுந்தினைச் சார்ந்தே இருத்தலாம். அதனையும் சுந்தரர் "திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே" என்று பாடி மனத்தைச் சிவன்பால் ஆற்றுப்படுத்தியுள்ளமை கண்டு மகிழலாம்.

பித்தா பிறைசூடீ என்னும் முதல் பதிகத்தில், பெண்ணையாற்றின் தென்பால் உள்ளது வெண்ணெய்நல்லூர் என்பதை அறிவித்துள்ளமையும், ஈண்டு நினைக்கத் தக்கது. இவ்வாறு பல இடங்களிலும் நிலநூல் வரலாற்றை நினைப்பித்துச் செல்வது காணலாம்.

மரபு காத்தவர்:

புனிதமான திருக்கோயில்கள், புனிதப் பெரியோர்கள் வாழ்ந்த இடங்கள் இவற்றைப் பெரிதும் மதித்துப் போற்ற வேண்டும். போற்றுவார்க்கு அதற்கு ஏற்ற பலன் உண்டு. இக்கருத்தை நமக்கு முதன்முதல் காட்டியவர் காரைக்காலம்மையார்.புனிதத் தலமாகிய