கயிலாயத்தில், காலால் நடத்தல் தகாது என்று, தலையால் நடந்து சென்றார். அதன் பயனாக அவரைப் பெருமான் "அம்மையே!" என அழைத்து அவர் வேண்டிய வரங்களை அளித்து மகிழ்ந்தார். அடுத்து இதே மரபைத் திருஞானசம்பந்தர் பின்பற்றினார். திருவாலங்காடு சேர்ந்தார். காரைக்காலம்மை தலையால் நடந்த தலத்தைக் காலால் கடத்தல் கடனன்று என்று பழையனூரிலேயே இரவு தங்கினார். ஆலங்காட்டுப் பெருமான் "நம்மைப் பாட மறந்தனையோ" என்று பிள்ளையார் கனவில் தோன்றி அருள் பாலித்தார். உடனே ஞானசம்பந்தர் திருவாலங்காட்டிற்கு எழுந்தருளி, "துஞ்ச வருவாரும்........" (தி. 1 ப. 45 பா. 1) என்று தொடங்கும் பதிகத்தை அருளிச் செய்தார். இது ஞானசம்பந்தர் மரபுகாத்து அருள் பெற்றமையைக் காட்டும் அகச்சான்றாகத் திகழ்கிறது. திருவடி தீட்சை : இப்பாரம்பரியத்தைச் சுந்தரரும் கடைப்பிடித்து அருள்பெற்றார். சுந்தரர் மாலைப்பொழுதில் திருவதிகை அடைந்தார். திருநாவுக்கரசர் கைத்தொண்டு செய்த தலத்தை மிதிக்க அஞ்சியவராய், அருகில் உள்ள சித்தவட மடத்தில் தங்கினார். அன்றிரவு உறங்கும்போது அதிகைப் பெருமான் சுந்தரர் திருமுடிமேல் அடிவைத்துத் திருவடி தீட்சை புரிந்தார். இது சுந்தரர் பெற்ற பெறும்பேறு அல்லவா? இச்சமயத்தில் பாடியருளியதே, "தம்மானை அறியாத சாதியார் உளரே" என்னும் பதிகமாகும். தம் என்பது ஆன்மாக்கள். மான் என்பது தலைவன். எனவே உயிர்களின் தலைவன் என்ற பொருளில் பாடியுள்ளார். "அம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்" (தி. 7 ப. 38 பா. 1) என்பது ஆரூரரின் அகச்சான்று. இம்மரபுச் செயலைத் திருஞானசம்பந்தர் அவதரித்த சீகாழிப் பதியிலும் காத்து நின்றார் சுந்தரர். "பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும்புகலி உள்ளும் நான் மிதியேன்" என்று ஊரையே வலமாக வந்தார். பெருமானும் ஞானசம்பந்தருக்குக் கொடுத்த அதே காட்சியை இவருக்கும் கொடுத்தார். இதனைச் சேக்சிழார், "மங்கை இடங்கொள்ளும் மால்விடையானும் எதிர்க்காட்சி கொடுத்தருள" என்று அறிவித்துள்ளார். சுந்தரரே, "காதில்வெண்குழையனைக் கடல்கொள மிதந்த கழுமலவளநகர்க் கண்டுகொண்டேனே" (தி. 7 ப. 58 பா. 1) என்று அகச்சான்று பகர்கின்றார்.
|